முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய முதல்வர் மேற்கொள்ள வேண்டிய 8 நடவடிக்கைகள்: கம்யூனிஸ்ட் முத்தரசன் அறிக்கை

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முத்தரசன், அவர் மேற்கொள்ள வேண்டிய 8 நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று,தலைமைச் செயலகம் சென்று ஐந்து கோப்புகளில் கையழுத்திட்டுள்ளார். முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  முதல்வர் அறிவித்துள்ள ஐந்து திட்டங்களில் ஒன்றான மகப்பேறு நிதி ரூ 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

முதல்வர் மேற்கொள்ள வேண்டிய 8 நடவடிக்கைகள்:
1.பூரண மதுவிலக்கு கோரிவரும் நிலையில் 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார். மற்ற கடைகளையும் விரைவாக மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்திட முன் வரவேண்டும்.
2. மதுபானக் கடைகளை மூடும் அதே வேளையில், அங்கு பணியாற்றிய ஊழியர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் அவர்களின் கல்வித் தகுதியை கணக்கில் கொண்டு பணியில் அமர்த்திட வேண்டும்.

காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் :
3. வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித் தொகை முன்பு வழங்கப்பட்டதை இரு மடங்காக உயர்த்தியிருப்பது(ரூ200-400) வரவேற்கத்தக்கது என்றாலும், இன்றைய நிலையில் இது மிகவும் குறைவான தொகை என்பது மட்டுமல்ல, இத்தொகையினைக் கொண்டு வாழ்க்கை நடத்திட இயலாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் கிராம நிர்வாகம் முதல் தலைமைச் செயலகம் வரை ஏறத்தாழ ஐந்து லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்பிட நடவடிக்கை எடுப்பதன் மூலம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
4. மீனவர்களுக்கு தனி வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ரூ 1.70 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்படும் என்று அறிவித்துள்ளது போதுமானதல்ல, குறைந்த பட்ச அடிப்படை வசதிகளுடன் வீடு கட்ட, குறைந்தபட்சம் வீட்டிற்கு ரூ 30 லட்சம் என ஒதுக்கீடு செய்திடல் வேண்டும்.

வறச்சியை போக்க நடவடிக்கை
5. இவை எல்லாவற்றையும் விட தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்த்து காத்திருப்பது, வரலாறு கண்டிராத வறட்சியின் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்கள் காப்பாற்றப்பட உரிய நடவடிக்கை எடுத்திடல் வேண்டும் என்பதாகும். குறிப்பாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்கிடவும், பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யவும், விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூ 25 ஆயிரம் வழங்கிடவும் வேண்டும்.
6. தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமுற்ற 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
7. கடுமையான முறையில் நிலவி வரும் குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
8. தமிழகத்தில் மிக மோசமாகி வருகின்ற பாலியல் வன்கொடுமை, கொலைகள் உள்ளிட்டவற்றைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்