முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் முன்னேற்றத்திற்கு வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அவசியம் - ராஜ்நாத் சிங் பேச்சு

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

இதாநகர் : நாட்டின் முன்னேற்றத்திற்கு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

புனிதமானவை

நாட்டின் வடகிழக்கு பகுதியின் கடைசியில் இருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டு 31-வது ஆண்டு விழா நேற்று தலைநகர் இதாநகரில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் முன்னேற்றத்திற்கு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் புனிதமானவைகளாகும். நாட்டில் உள்ள வளம் நிறைந்த பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடந்த பல பத்தாண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வில்லை.
வளர்ச்சி அடைகிறது

கடந்த 2001-ம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது வடகிழக்கு பிராந்தியத்திற்காக தனியாக ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி அமைச்சர் ஒருவரை நியமித்தார். அதன் பின்னர் இந்த பிராந்தியம் வளர்ச்சி அடையத்தொடங்கியது. தற்போது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வடகிழக்கு கொள்கையை உருவாக்கி வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறார். அதுவும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த மாநிலமானது பாதுகாப்பு கேந்திர பகுதியில் மட்டுமல்லாது சீனா, பூடான், மியான்மர் ஆகிய நாடுகளின் எல்லையையொட்டி உள்ளது. அதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும்.

சீனாவுடன் நல்லுறவு

இந்தியா-சீனா இடையே உறவு வளர்ந்து வருகிறது. இருநாடுகளிடையே 75 பில்லியன்  அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்து வருகிறது. அருணாசலப்பிரதேச மாநிலத்தில் இளைஞர்கள் அதிக அளவு உள்ளனர். முதல்வரும் இளமையானவர். அதோடு நெடுநோக்கு பார்வை உள்ளவர். அதனால் நீண்ட கால அடிப்படையில் நல்ல திட்டங்களை அவர் தீட்டி செயல்படுத்துவார். அவரது ஆட்சியில் மாநிலம் உன்னதமான வளர்ச்சியை அடையும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். ராஜ்நாத் சிங்குடன் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும், கட்சியின் தேசிய செயலாளர் ராம் மதாப்பும் சென்றிருந்னர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்