முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரிய தலைவரின் அண்ணன் கொலை குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடைபெறும் : மலேசிய தூதர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - வட கொரிய தலைவரின் அண்ணன் கொலை குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடைபெறும் என்று மலேசிய தூதர் உறுதி அளித்துள்ளார்.

வி‌ஷத் தாக்குதல்
வடகொரியாவில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. நாட்டின் தலைவராக 33-வயது கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். இவருடைய அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). இருவரும் அண்ணன், தம்பி என்றாலும், ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்தவர்கள் ஆவர். கடந்த 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மக்காவ் செல்வதற்காக கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கிம் ஜாங் நாம் காத்திருந்தார். அப்போது அவர் மீது பயங்கர வி‌ஷத் தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரை பதவிபோட்டி காரணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சதித்திட்டம் தீட்டி கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

4 பேர் கைது
கிம் ஜாங் நாம் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றி நேரில் பார்த்தவர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து இருந்தனர். 2 பெண்கள் அவருடைய முகத்தின் மீது வி‌ஷ ஊசிகளை குத்திவிட்டு ஓடியதாகவும் கூறப்பட்டது.  இது தொடர்பான சிசிடிவி கேமிரா பதிவும் வெளியானது. இந்த படுகொலை தொடர்பாக வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த 2 பெண்களும், மலேசியா மற்றும் வடகொரியா நாடுகளைச் சேர்ந்த 2 ஆண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பாரபட்சமற்ற விசாரணை
இதற்கிடையே, வடகொரியாவுக்கான மலேசிய தூதரை மலேசிய அரசு நேற்று முன்தினம் திரும்ப அழைத்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் மலேசியாவுக்கு திரும்பிய மலேசிய தூதர் முகம்மது நிசான் முகம்மது சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர், மலேசிய தலைவர் கொலை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும் என்றார். மலேசியாவுக்கான வடகொரிய தூதர், கிம் கொலை தொடர்பான மலேசிய அரசின் விசாரணையை கடுமையாக விமர்சனம் செய்தார். வடகொரியா தூதர் கூறுகையில், அரசியல் அழுத்தம் காரணமாக இந்த விசாரணை நடைபெறுவதாகவும் கூட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.  ஆனால், வடகொரிய தூதரின் குற்றச்சாட்டுக்களை மலேசிய அரசு நிராகரித்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்