முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு ரூ.2247 கோடி வறட்சி நிவாரணம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2247 கோடி  வறட்சி நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வறட்சியால் பாதிப்பு

வறட்சி குறித்த கள ஆய்வின் முடிவில், மொத்தம் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில், 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டது. இவற்றுள், 1,564 கிராமங்களில் பயிர்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 87 விழுக்காடு வரை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கும் பணி

33 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்க வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து கணக்கெடுப்பு மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, கணக்கெடுக்கும் பணி முடிவு பெற்றுள்ளது. வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வாயிலாக, பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க 6.91 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

பணி வரம்பு உயர்வு

வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்திற்கு...

வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நகர்ப்புறங்களில் ...

வறட்சி காரணமாக நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நிவாரண உதவி

பொதுப்பணித் துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்களை மேம்படுத்த 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், இறந்தவர்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

பயிர் காப்பீடு

புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பதால், நடப்பு ஆண்டில் பயிர்க் காப்பீட்டிற்கு அரசின் பங்களிப்பு தொகையான 410 கோடி ரூபாய் வேளாண்மைத் துறை மூலம் செலுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 14.99 லட்சம் விவசாயிகள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 30.102 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டங்களில் ஆய்வு

தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 39,565 கோடி ரூபாய் நிதியுதவி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையினை பார்வையிட 9 உறுப்பினர்கள் கொண்ட குழு 23.1.2017 முதல் 25.1.2017 வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ரூ. 2,247 கோடி உதவித்தொகை

விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்கிட, வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து செய்த கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பின்படி 32,30,191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50,34,237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரண உதவித் தொகையாக 2,247 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன் மூலம், வேளாண் பயிர் சாகுபடி செய்த 28,99,877 விவசாயிகளுக்குச் சொந்தமான 46,27,142 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 2,049 கோடி ரூபாயும், தோட்டப் பயிர் சாகுபடி செய்த 3,27,398 விவசாயிகளுக்குச் சொந்தமான 4,04,326 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 197 கோடி ரூபாயும், பட்டுப்பூச்சி வளர்ப்புக்காக மல்பெரி சாகுபடி செய்த 2,916 விவசாயிகளுக்குச் சொந்தமான 3,658 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 1 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 2,247 கோடி ரூபாய் வேளாண் இடு பொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படவேண்டும்.

வங்கிக் கணக்கிற்கு ...

மேற்கண்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று (நேற்று)எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், 32,30,191 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை 2,247 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன். இதன் படி, மாநில பேரிடர் நிவாரண நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் மற்றும் இதர பாசன பயிர்களுக்கும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465-ம், மானாவாரி பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,000-ம், நீண்டக்கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7,287-ம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,428-லிருந்து ரூ.3,000 வரை இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படும்.

காப்பீட்டுத் ஈட்டுத் தொகை

இதைத் தவிர, மாநில அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் பயனாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 இலட்சம் விவசாயிகள், பதிவு செய்துள்ள பயிருக்கு ஏற்றவாறும், மாவட்டத்திற்கு ஏற்றவாறும், பயிர் இழப்புக்கு ஏற்றவாறும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,800 முதல் ரூ.69,000 வரை காப்பீட்டுத் ஈட்டுத் தொகையாக பெற இயலும். பயிர் அறுவடை பரிசோதனை முடிய முடிய, இந்த காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் விடுவிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

தமிழக அரசு வறட்சி குறித்த நிலைமையினை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்படும் அனைத்து துயர் துடைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நிவாரணத்தொகை விவரம்:
1) நெற்பயிர், இதர பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465.
2) மானாவாரி பயிருக்கு ரூ.3,000.
3) நீண்டகாலப் பயிருக்கு ரூ.7,287.
4) பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.2,428 முதல் ரூ.3.ஆயிரம் வரை.
5) 14.99 லட்சம் விவசாயிகள் ரூ.4,800 முதல் ரூ.69,000 வரை காப்பீடு பெறலாம்.
6) உதவிதொகைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்