முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய மின்னணு ரே‌ஷன் கார்டு - அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஏப்ரல் மாதம் 1-ம்தேதி முதல் புதிய மின்னணு ரே‌ஷன் கார்டு வழங்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

கலந்தாய்வுக் கூட்டம்

நேற்று சென்னை சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் மாவட்டவழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

துரித நடவடிக்கை

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநரின் உரையில் குறிப்பிட்டவாறு, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, 1.4.2017 முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க அம்மாவின் அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இன்று வரை, 5 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர்.

மனுதாரர்களுக்கு தகவல்

இது தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும். மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உடனடியாக பெற்று அங்காடிகளில் உள்ள விற்பனை இயந்திரத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதுவரை 18 லட்சத்து 54 ஆயிரத்து 700 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தயாராக உள்ள 29 ஆயிரத்து 815 குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்றுவரை, 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

951 நபர்கள் கைது

குறைதீர் முகாம்களில், இன்று (நேற்று)வரை, 5 லட்சத்து 77ஆயிரத்து 53 மனுக்கள் பெறப்பட்டு, 5 லட்சத்து 55 ஆயிரத்து 781 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினரால் எடுக்கப்பட்டு வரும் கடுமையான தொடர் நடவடிக்கைகளால் இதுவரை 951 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு பாராட்டு

தமிழக அரசு எடுத்து வரும், விலைக்கட்டுப் பாட்டு நடவடிக்கைகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெளிச் சந்தையில் வெகுவாக குறைந்து வருகிறது என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. வெளிச்சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென அலுவலர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்