முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி பகுதியில் மானாவாரிப்பயிரில் மகசூல் அதிகரிக்க புதிய தொழில் நுட்பம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      ஈரோடு

 

மழையை மட்டுமே நம்பி மானாவாரியாக சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதால் சிறப்பான மகசூல் கிடைக்கும் என்பதை வேளாண்மைத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் மானாவாரி மேம்பாட்டுத்திட்ட விவசாயிகள் பயிற்சிக்குத் தலைமைவகித்துப் பேசிய நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி இது குறித்து மேலும் பேசியதாவது.

‘ நம்பியூர் வட்டாரத்தில் மானாவாரி நிலக்கடலை சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்படுகிறது. பரவலான மழை பொய்யாததாலும் , நிலக்கடலை விதைகள் ஏர்கள் மூலம் விதைக்கப்படாமல் , டிரேக்டர் மூலம் மேலாக விதைக்கப்படுவதாலும் முளைப்புத்திறன் பாதிப்பதுடன் பயிர் எண்ணிக்கையும் குறைகிறது. பொதுவாக மழை சரியாகப் பெய்யாமல்போவது வழக்கமாக உள்ளதால் நிலக்கடலைக்கு அடியுரம் இடுவதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இரசாயன உரங்களை அடியுரமாக இடும்போது , வறட்சிக்காலத்தில் பயிர் கருகிவிடுவதை முக்கியக் காரணமாகக் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடவும் , பயிர் கருகாமல் , நல்ல மகசூல் பெறவும் ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவது மிகவும் சிறந்ததாகும். ஒரு ஏக்கருக்கு ஒரு வண்டி மட்கிய குப்பையுடன் 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் , 30 கிலோ பொட்டாஷ் உரங்களை நன்கு கலந்து காற்றுப்புகாதவாறு குழியில் இட்டு வைத்திருந்து ஒரு மாதம் கழித்து கடைசி உழவின் போது இடவேண்டும். இதனால் மழை நன்கு பெய்யும் போது நல்ல மகசூல் கிடைப்பதுடன் , வறட்சியின் போது பயிருக்கு பாதிப்பு ஏற்படுவது கிடையாது " என்றார். (படம்)

இப்பயிற்சியில் கறவை மாடுகள் வளர்ப்பு முறை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து கால்நடை மருத்துவர் பிரபு , வேளாண்மையில் இயந்திரங்களின் பங்கு குறித்து மைராடா வேளாண் அறிவியல் நிலைய பொருள் வல்லுநர் ஜான்பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பயிற்சியில் பங்குபெற்ற விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தான கையேடு வழங்கப்பட்டது. (படம்) மேலும், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்தான செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.(படம்)

இப்பயிற்சியில் நம்பியூர் , கோசணம் , ந.வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிறைவாக நம்பியூர் வேளாண்மை அலுவலர் ஜீவதயாளன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நம்பியூர் வட்டார வேளாணதுறையினர் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்