ஆட்சி அமைக்க தேர்தலுக்கு பின்பு பா.ஜ. கூட்டணி வைத்துக்கொள்ளாது : அமீத் ஷா அறிவிப்பு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      அரசியல்
amit-shah 2016 11 30

வாரணாசி  - உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சியுடனும் பாரதிய ஜனதா கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று அந்த கட்சியின் அகில இந்திய தலைவர் அமீத் ஷா தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4-வது கட்டமாக 53 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் எந்தக்கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதனால் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது போல் பகுஜன்சமாஜ் கட்சியுடன் பாரதிய ஜனதா கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூட்டணி இல்லை:
இந்தநிலையில் பா.ஜ.தலைவர் அமீத்ஷா நேற்று வாராணாசியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் பாரதிய ஜனதா எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாது. மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73-ல் பாரதிய ஜனதா வெற்றிபெற்று பெரும் சாதனையை நிகழ்த்தியது. அதேமாதிரி மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது போன்று இந்த சட்டசபை தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

3 மாநிலங்கள்:
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால் இந்த தேர்தலும் பாரதிய ஜனதாவுக்கு முக்கியமான தேர்தலாகும். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்பது உறுதியாகும். பஞ்சாப் மாநிலத்தில் உறுதி சொல்ல முடியாது. அங்கு மும்முனை போட்டி கடுமையாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலம் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாகும். அதனால் இந்த மாநிலத்தில் வெற்றிபெறுவதற்கு பாரதிய ஜனதா கடுமையான பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமீத்ஷா மற்றும் கட்சியின் தலைவர்கள் ஏராளமானோர் இங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: