சரத்பவாரின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை: தலைவர்கள் வாழ்த்து

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      அரசியல்
sharad pawar(N)

மும்பை  - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அரசியலில் இறங்கி நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாரமதியை சேர்ந்த சரத்பவார் கடந்த 1960-ம் ஆண்டுகளில் அரசியல் கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராக சேர்ந்தார். அவருக்கு மறைந்த மத்திய அமைச்சர் ஒய்.பி. சவாண் வழிகாட்டியாக இருந்தார். அதனால் அவரது அரசியல் வாழ்க்கை தொடர்ந்து நீடிக்கிறது.

முதன் முதலாக பாரமதி சட்டசபைதொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் வெற்றிபெற்றார். 1967-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி அவர் சட்டசபை உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்தவெற்றியையொட்டி சரத்பவார் மாநில துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் 38 வயதாக இருக்கும்போது அதாவது கடந்த 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றார்.

சரத்பவாரின் 50 ஆண்டுகால அரசியிலில் பல நிகழ்வுகளை சந்தித்துள்ளார். அப்போது மாநிலத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். காங்கிரசில் பிளவு மற்றும் பல அரசியல் நிகழ்வுகளையும் சந்தித்த சரத்பவாரை அரசியல் சாம்பாவான் என்று பல அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட அவர் ஒரு தடவை கூட தோற்றதில்லை.

வாழ்த்து:
சரத்பவாரின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வு நிறைவு பெறுவதையொட்டி அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாரமதி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும் அவரது மகளுமான சூலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கடந்த 1967-ல் இருந்து இதுவரை நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடையாதவர் என்றும் இதற்காக நான் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல், மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதல்வர் அஜீத் பவார் உள்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: