முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பதுங்கி இருக்கும் மேலும் 4 ஐ.எஸ். உளவாளிகளை கைது செய்ய அதிரடி வேட்டை

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிய வாலிபருக்கு உதவிய மேலும் 4 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈராக், சிரியாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் தங்களது இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியிலும், ஆதரவாளர்களை திரட்டும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.தமிழகத்தில் அவ்வப் போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் தலையெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கடந்தாண்டு ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் போட்டோக்களை பதிவிட்ட இளைஞர்கள் சிலர் சிக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்களை கண்காணிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.குறிப்பாக சென்னையில், ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாளர்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில உளவு பிரிவு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஐ.எஸ். ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.இதே போல அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து ஐ.எஸ். ஆதரவாளர்களை கண்காணித்து வந்தனர். அப்போது ராஜஸ்தானில் ஜமீல் அகமது என்ற வாலிபர் ஐ.எஸ். இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அப்போது ஜமீல், ஐ.எஸ். தீவிரவாதி என்பது தெரியவந்தது. இவர் இந்தியா, சீனா, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு, திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் தென் மாநிலங்களில், ஐ.எஸ். ஆதரவு இளைஞர்களை இவர் மூளைச்சலவை செய்ததும் தெரிய வந்தது. தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுடன் ஜமீல் தொடர்பில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜமீல், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இக்பால் என்ற வாலிபருடன் அடிக்கடி சமூக ஊடகங்கள் வாயிலாக பேசி இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இருந்து ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி திரட்டி கொடுக்கும் பணியில் இக்பால் ஈடுபட்டு வந்தார். ரூ.3 லட்சம் வரையில் அவர் ஜமீலிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இக்பாலை பிடிப்பதற்காக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் இக்பால், ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்திய வழக்கில் சிக்கினார். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் இக்பாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சென்னை வந்தனர். ஐ.எஸ். தீவிரவாதியுடன் தொடர்பில் இருந்து பண உதவிகளை செய்த குற்றத்துக்காக இக்பாலை கைது செய்தஅவர்கள், ராஜஸ்தான் அழைத்துச் சென்று ஜெய்ப்பூர் சிறையில் அடைத்தனர்.சென்னையில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் துணையுடன் இக்பால், ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை பிடித்து அவர்கள் மூலமாக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டது இதன் மூலம் வெட்ட வெளிச்சமானது. இக்பாலுடன் தொடர்பில் இருந்த 4 பேரும் தொழில் அதிபர்கள், வியாபாரிகள் போர்வையில் ஐ.எஸ். உளவாளிகளாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் சென்னையில் ஐ.எஸ். இயக்கத்தை கால் பதிக்கச் செய்வதற்காக இதுபோன்று செயல்பட்டதும் உறுதியானது.

இதையடுத்து இவர்கள் 4 பேரையும் கைது செய்ய ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். இக்பால், வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை இறக்குமதி செய்து, இங்குள்ள சில வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது தான் ஐ.எஸ். இயக்கத்தினருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதனை பயன்படுத்திக் கொண்ட இக்பால், வியாபாரிகள் சிலரையும், மயிலாப்பூரை சேர்ந்த நகை கடை அதிபர் ஒருவரையும் ஐ.எஸ். உளவாளிகளாக மாற்றி இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இக்பால் பிடிபட்டதும் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். சென்னையில் ரகசிய இடத்தில் பதுங்கி உள்ள அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.4 பேரும் பதுங்கி இருக்கும் இடம் இக்பாலுக்கு நிச்சயமாக தெரியும் என்று ராஜஸ்தான் போலீசார் நம்புகிறார்கள். இக்பாலை வைத்தே 4 பேரையும் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இக்பாலை ராஜஸ்தான் போலீசார் நேற்று 8 நாட்கள் காவலில் எடுத்தனர்.நேற்று முன் தீனம் இரவு இக்பால் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.தலைமறைவாக உள்ள 4 பேர் மட்டுமின்றி இவர்களை போல மேலும் பலர் இக்பாலுடன் தொடர்பு வைத்து ஐ.எஸ். இயக்கத்துக்கு தேவையான உதவிகளை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.இதன் முடிவில், சென்னையில் பதுங்கி உள்ள ஐ.எஸ். உளவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர்கள் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்