நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களை போடுவதற்கு 16 தொட்டிகள்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை போடுவதற்கு 16 தொட்டிகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.
சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் ஒரு சுற்றுலா மாவட்டம். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் குடிக்கும் தண்ணீர் பாட்டில்களை போடுவதற்காக நவீன தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 10 தொட்டிகளும், ஆன்டி பிளாஸ்டிக் நிதியின் மூலம் 6 தொட்டிகளும் என 16 பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் ஊட்டி மற்றும் குன்னூர் நகராட்சி பகுதிகளில் வைக்கப்பட உள்ளன. இதனை அரசு அதிகாரிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கலந்து கொண்டு ஊட்டி நகராட்சி ஆணையாளர் டாக்டர் பிரபாகரன், குன்னூர் நகராட்சி அதிகாரிகள், ஊட்டி படகு இல்ல மேலாளர் ஆகியோரிடம் நவீன குப்பை தொட்டிகளை வழங்கினார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.முருகேசன் உடனிருந்தனர்.
சுற்றுலா மையங்கள்
இந்த குப்பைத்தொட்டிகள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான தொட்டபெட்டா, முதுமலை, மசினகுடி, கோடநாடு காட்சி முனை, தலைகுந்தா, சூட்டிங் மட்டம், பர்லியார், சிம்ஸ்பார்க், கோத்தகிரி பேருந்து நிலையம், கூடலூர் பேருந்து நிலையம், ஊட்டி மத்திய பேருந்து நிலையம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பாரதியார் வணிக வளாகம் மற்றும் குன்னூர் பேருந்து நிலையம் ஆகிய 16 இடங்களில் வைக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை அந்த நவீன குப்பைத்தொட்டியில் மட்டுமே போடுமாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.