முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் தி.மு.க உறுப்பினர்கள் வன்முறை - பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.கவினர் சட்டசபையில் வன்முறையில் ஈடுபட்டனர் என்று அ.தி.மு.க செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களை வெளியேற்றி, சபாநாயகர் ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கலவரத்தை உருவாக்குகிறது

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசியலில் திட்டமிட்டு தி.மு.க. குழப்பம், கலவரத்தை உருவாக்கி வருகிறது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சபையை ஒத்திவைத்து பின்னர் ஒரு நாளில் நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இரண்டு பிரச்னைகளை தி.மு.கவினர் சட்டசபையின் முன் வைத்தார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டியது தானே இதில் என்ன தயக்கம் என்று நினைக்க தோன்றும், ஆனால் ஏன் ரகசிய வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டது என்பதற்கு நியாயங்கள் பல இருந்தாலும் ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு விரோதமானது.

சட்டத்துக்கு எதிரானது

ரகசிய வாக்கெடுப்பு கோருவது சட்டத்துக்கு எதிரானது. கட்சி தாவல் சட்டத்துக்கு எதிரானது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் போது அவர்கள் மாற்றி ஓட்டு போட்டால் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது? சட்டத்தில் இடம் இல்லாததால் தான் தி.மு.க.வின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார். மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கொடுத்திருக்கிறார். காலம் தாழ்த்தாமல் 2 நாளில் நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தறிந்து சிந்தித்து ஓட்டு போட வேண்டும். இதற்காக சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. அப்படியே சட்டமன்ற உறுப்பினர்களை ஆங்காங்கே தொகுதிக்கு சென்று விட்டு அவர்களை திரும்ப விடாமல் செய்தால் என்ன செய்வது? எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் 80 சட்டமன்ற

உறுப்பினர்களை கடத்தி சென்று விட்டால் என்ன செய்வது?

வெளியேற்றம் ஏன்?

தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது சரியா என்று கேட்கிறார்கள். சட்டசபையில் 74 உறுப்பினர்கள் இருந்தாலே தீர்மானம் நிறைவேற்ற முடியும். சட்டசபையில் கோரம் இல்லாவிட்டால் தான் நிறைவேற்ற முடியாது. சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்ட விரோதமாக நடக்கிறார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் இல்லை. இதனைத் தான் சபாநாயகர் சொன்னார். சட்டசபையை ஒத்தி வைப்பதும், ஒத்தி வைக்காததும் சபாநாயகரின் உரிமை. சபாநாயகரின் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்யலாம். வெளிநடப்பு செய்வது தான் தி.மு.க.விற்கு கை வந்த கலையாயிற்றே? சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தான் சபாநாயகர் வெளியேற்றினார். சட்டசபையை நடத்தவிடாமல் செய்ததால் தி.மு.கவை வெளியேற்றினார். அது அவருடைய உரிமை. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களை வெளிநடப்பு தானே செய்தார்கள். தி.மு.க.வினர் கலவரம் செய்ததால் தான் வெளியேற்றப்பட்டார்கள்.

ஆட்சியை கவிழ்க்க...

இப்போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் வரும்போது தி.மு.க.வின் நிலை பற்றி ஸ்டாலின் என்ன சென்னார். தீர்மானத்தில் நடுநிலை வகிப்போம் என்றார். மறுநாள் இதனை எதிர்ப்போம் என்றார். என்ன காரணம்? அ. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மாற்றி விடலாம். ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று தி.மு.க. நினைத்து தங்கள் நிலையை மாற்றிக்கொண்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு மட்டும் தான் தி.மு.க.வின் ஒரே நோக்கம். எனவே தான் சட்டசபையை நடத்த விடாமல் கலாட்டா செய்தனர். கவர்னரிடம் சென்றார்கள். ஜனாதிபதியை சந்திக்க போகிறோம் என்றார்கள். நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று கோர்ட்டுக்கு போகிறார்கள். நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று யாராவது சொல்வார்களா என்று பார்க்கிறார்கள். இப்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இளைஞர்கள், மாணவர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தி.மு.க. இருக்கிறது.

அழிவை நோக்கி ...

சபாநாயகரை தி.மு.க எதிர்ப்பது சரி. அவரை பிடித்து தள்ளினால் என்ன பொருள். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து பார்த்தால் அதன் வலி தெரியும், சபாநாயகர், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது கைவைத்து தள்ளுகிறார்கள். அதனால் தான் அனாவசியமாக துச்சமாக நினைத்து தள்ளுகிறார்கள், சபாநாயகர் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறார். தி.மு.க ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். இப்படி எதிர்ப்பது அவர்கள் அழிவை நோக்கி செல்கிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை மிரட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சபாநாயகர் தலையிட முடியாது. வெளியில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவர் பொறுப்பல்ல இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்