முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாற்று நாயகி தில்லையாடி வள்ளியம்மை 103 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி ஊராட்சியில் அமைந்துள்ள தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் நேற்றுதில்லையாடி வள்ளியம்மை அவர்களின் 103 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

மரியாதை

 

 

மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தெரிவித்ததாவது, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சிற்றூர் தில்லையாடி வள்ளியம்மையின் முன்னோர்கள் அந்த ஊரிலிருந்து தென் ஆப்பிரிக்காவில் குடியேறியவர்கள். தென் ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கங்களும், வைரச் சுரங்கங்களும் நிறைந்த ஜோகன்ஸ்பர்க் நகரில் 1898 ஆம் ஆண்டு பிறந்தவர் வள்ளியம்மை. பெற்றோர் முனுசாமி–மங்களத்தம்மாள். தென் ஆப்பிரிக்காவில் தமிழ்த் தொழிலாளர்களின் உரிமைக்காக மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தில் வள்ளியம்மை கலந்து கொண்டார். அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அன்னியர் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடு விடுதலை பெற எத்துனையோ பேர் தன்னலம் மறந்து தளராது உழைத்திருக்கின்றார்கள். இன்னல் நேரிடினும் இன்னுயிரை இழப்பதாயினும் பரவாயில்லை அன்னை பூமி விடுதலை பெற்றால் போதும் என்று எண்ணி அவர்களெல்லாம் அஞ்சாது போரிட்டனர்.

"மண்ணில் இன்பங்களை வேண்டி சுதந்திரத்தின் மாண்பினை இழக்க மாட்டோம் "என்ற உறுதி உள்ளம் கொண்டு அநீதிக்கு எதிராகப் போரிட்ட அத்தகைய தியாகிகளின் வரிசையில் தில்லையாடி வள்ளியம்மை தலைசிறந்த இடத்தை பெற்றிருக்கின்றார். "இருண்ட கண்டம் "என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்காவில் பொன் நகரம் என்று அழைக்கப்படும் இடம் ஜோகன்ஸ்பர்க் ஒரு காலத்தில் மக்கள் நடமாட்டமின்றி காய்ந்த புல் தரையாக காட்சி அளித்த அந்த இடம் தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டதனால் வளம் கொழிக்கும் பூமியாக மாறியது. தங்கச் சுரங்கங்களைத் தன்னகத்தே கொண்டதனால் உலகத்தின் கவனத்தை ஈர்த்த இந்த ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் தான் நமது வரலாற்று நாயகி வள்ளியம்மை பிறந்தார். பள்ளியில் சேர்ந்து பயின்றார். ஆனால் அவரது எண்ணமெல்லாம் நிற வெறிக் கொடுமையை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தையே சுற்றிச் சுழன்றது. இந்திய மக்களுக்கு இன்னல் விளைந்த போதெல்லாம் வள்ளியம்மையின் இதயம் துடித்தது. தென்னாப்பிரிக்காவில் குடியமர்ந்து அந்நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றிய இந்திய மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்ட போதெல்லாம் அவர் ஆவேசத்தின் சின்னமாக மாறினார்.

காந்திஜி தனது சத்தியாகிரகப் போராட்டத்தின் உச்சகட்டமாக 1913- ஆம் ஆண்டு, எல்லைகளை அனுமதியின்றி தாண்டக் கூடாது என்ற விதிகளை மீறி நேட்டாலிலிருந்து ட்ரான்வாலுக்குள் நுழைந்தார். அவருடன் சென்ற சில ஆயிரம் தொண்டர்களில் பதினாறு வயசு வள்ளியம்மாளும் ஒருவர். அவரும் அன்னை கஸ்தூரி பாவோடு கைதாகி பீட்டர்மாரிட்ஸ்பர்க் சிறையில் கடுஙகாவலில் வைக்கப்பட்டார். கடுமையான உழைப்பும் அரைப் பட்டினியுமாகச் சிறையில் வாடிய வள்ளியம்மாள் விடுதலையான போது இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத நோய்க்கு ஆளாகி 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி 22- ஆம் தேதி அகாலமாய் மரித்தார். அப்போது அவருக்கு வயது பதினாறு கூட பூர்த்தியாகவில்லை.

இந்த நாளில் வெளிநாடு சென்று இந்தியர்களின் உரிமைக்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் நினைவு நாளை நாம் அனைவரும் போற்றுவோம் என மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கதிரவன், தரங்கம்பாடி வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் கிராமமக்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்