தோல்வி பயத்தால் பா.ஜ.க. வினர் கீழ்த்தரமாக பேசி வருகிறார்கள் : அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2017      அரசியல்
Akhilesh Yadav 2017 1 22

லக்னோ  - உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால் பாரதிய ஜனதா கட்சியினர் கீழ்த்தரமாக பேசி வருகிறார்கள் என்று மாநில முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி மற்றும் பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரசாரம் செய்யும்போது கடுமையான வார்த்தைகளை பேசி வருகிறார்கள்.

கழுதை:
அகிலேஷ் யாதவ் தனது பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை கழுதை என்று கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த மோடி, தோல்வி பயத்தால் குஜராத் கழுதைகளை பார்த்து அகிலேஷ் யாதவ் பயப்படுகிறார் என்றார். இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கசாப் ஒழிந்தால் தான் மாநிலம் வளர்ச்சி அடையும் என்று  அமீத்ஷா குறிப்பிட்டார். கசாப் என்பது தீவிரவாதியின் பெயர் இவர் மும்பை தாக்குதலில் தூக்கிலிடப்பட்டார். க என்றால் காங்கிரஸ்,ச என்றால் சமாஜ்வாடி ப என்றால் பகுஜன்சமாஜ் கட்சியாகும். இந்த 3 கட்சிகளின் முதல் எழுத்தை சேர்த்து கசாப் என்று பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கீழ்தரமான பேச்சு:
இதற்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக பதில் அளித்துள்ளார். மாநிலத்தில் தோல்வி ஏற்படும் என்று கருதி பாரதிய ஜனதா கட்சியினர் கீழ்தரமாக பேசி வருகிறார்கள் என்று பதில் அளித்துள்ளார். பலராம்பூரில் சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அகிலேஷ், உயர்ந்த பதவியில் இருக்கும் பிரதமர் மோடி கூட என்னுடன் போட்டி போடுகிறார். கீழ்தரமான வார்த்தைகளை கூறுகிறார். இது அவரது பதவிக்கும் அந்தஸ்துக்கும் அழகல்ல என்றார். தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் தோற்றுவிட்டனர். அதனால் அவர்கள் பிரசார முறையையும் பேசும் முறையையும் மாற்றிவிட்டனர் என்றும் அகிலேஷ் தெரிவித்தார். பிரதமர் மோடியே டெல்லியில் இருப்பதாக தெரியவில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தை சுற்றிச்சுற்றி வருகிறார் என்று மற்றொரு தேர்தல் பிரசாரத்தின்போது அகிலேஷ் கூறினார்.

தத்துப்பிள்ளை:
தோல்வி பயம் ஏற்பட்டிருப்பவர்கள்தான் நடந்த சம்பவத்தைப்பற்றி பேசுவார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தின் தத்துப்பிள்ளை என்று மோடி கூறியதற்கு பதில் அளித்துள்ள அகிலேஷ், நீங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தத்துப்பிள்ளை என்றால் இந்த மாநிலத்தை சேர்ந்த எங்களை யார் தத்து எடுப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வளர்ச்சி பற்றி மோடி பேசுகிறார். இது குறித்து என்னுடன் நேரடி விவாதத்திற்கு வர மோடி தயாரா இருக்கிறாரா? மாநிலத்திற்கு அவர் செய்ததை கூறட்டும். என் ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன செய்யப்பட்டது என்பதை விளக்குகிறேன் என்றும் அகிலேஷ் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: