முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க தினகரன் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஜெயலலிதா மீது அவதூறு பழி போட்ட மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அ தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் சொன்ன அப்பட்டமான அவதூரை திரும்ப பெற வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். ஸ்டாலின் பொது வாழ்க்கையில் எத்தனை புனிதர் வேடம் போட்டாலும் அது மக்களிடம் எடுபடாது என்று அவர் கூறியிருக்கிறார்.

அம்மா எனும் மூன்றெழுத்து மந்திரம்
மு.க. ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திமுக-வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் 24.2.2017 அன்று பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறார். அதுவும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் அம்மா எனும் மூன்றெழுத்து மந்திரத்தால் ஆராதிக்கப்படும் ஓர் கனிவுளத்தின் இலக்கணத்தை, கருணையே வடிவான இருப்பிடத்தை, அதுவும் அவர் பிறந்த நாளில், அவர் மறைந்ததற்கு பிறகு வரும் முதல் பிறந்த நாளில் கோடானு கோடி தொண்டர்கள் மிகுந்த நெகிழ்வோடும், வேதனையோடும் ஆழ்ந்திருக்கும் வேளையில் இது போன்றதொரு அவதூறை, கடுகளவும் உண்மையற்ற பழிச்சொல்லை மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி விமர்சித்திருப்பது அவரது பண்பாடற்ற தன்மையையே காட்டுகிறது.

 பகைவருக்கும் அருளும்  நல்லுள்ளம்
உலகத்து உயிரினங்களை எல்லாம் உளமாற நேசிப்பவரும், அரசு தொட்டில் கட்டி, அன்னமிட்டு பசி போக்கும் அருங்குணத்தால் உலகமே போற்றிடும், ஈகைக்கு இந்த நூற்றாண்டுச் சான்றாக வாழ்ந்து உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நீக்கமற நிலையாசனமிட்டு வீற்றிருக்கும் ஒரு நிகரில்லா தலைவியை, பகைவருக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்னும் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக தன் மீது லாரி ஏற்றி கொலை செய்யவே முயற்சித்தவர்களின் வாரிசுக்கே கஷ்டம் என்று சொன்னதுமே ஐந்து லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த வள்ளல் மனத்தை, வாஞ்சை குணத்தை உண்மைக்கு மாறான கடுஞ்சொற்களால் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கரை நிறைந்து ஓடி வரும் காவேரியும், ஐந்து மாவட்ட உழவினத்தின் அல்லல் தீர்க்கும் முல்லைப் பெரியாறும், ஏழை, எளிய தொழிலாளர்களின் உடைமையாகிய என்.எல்.சி. பங்குகளும் என எண்ணில்லா உரிமை மீட்பு வெற்றிகளும்; விலையில்லா அரிசியால் பசி தீரும் மக்களும், வீடுதோறும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி இவற்றால் பயன்பெறும் மக்களும், மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், பசுமை வீடுகள் என்றெல்லாம் பார் வியக்கும் திட்டங்களால் அன்றாடம் பயனடையும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் மனித தெய்வமாகவே வாழுகின்ற எங்கள் அம்மாவின் நினைவலைகளை, திட்டங்களுக்கு பெயர் சூட்டி தான் நிலைநிறுத்த வேண்டும் என்ற அவசியமோ, கட்டாயமோ இல்லை என்பதை உலகம் அறியும்.உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமுமென அனைத்து தீய குணங்களையும் தன்னகத்தே கொண்டு என்னதான் பொது வாழ்க்கையில் மு.க. ஸ்டாலின் புனிதர் வேடம் போட்டாலும், அவர் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் வன்மமும், வன்முறையும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளால் பீறிட்டு வந்திருக்கிறது.

திரும்பப் பெற வேண்டும்
இதன் மூலம் நடைபயிற்சியைக் கூட கொலை பயிற்சியாக்கியும், நட்புக்கும் நஞ்சையே பரிசளிக்கும் இந்த நயவஞ்சகர்களின் உண்மை வேஷம் அவர்கள் உதித்த சொற்களாலே உணர்த்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை கொலைக் குற்றவாளி என்கிற அடுக்காத அவதூறு பழிபோட்ட மு.க. ஸ்டாலின், தான் பயன்படுத்திய அப்பட்டமான அவதூறினை திரும்பப் பெற்று, தனது பண்பாடற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை, வாழப்பாடி பழனிச்சாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என்றும், அவ்வப்போது பொது இடங்களில் கோமாளித்தனங்கள் புரியும் மு.க. ஸ்டாலின் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்வதே உத்தமம் என்றும் இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்