பல்கலைக்கழகங்களில் மோதல் விவகாரம்: காங்கிரசும் இடதுசாரியும் சாயம் பூசுகிறது: வெங்கையா நாயுடு

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2017      அரசியல்
Venkaiah Naidu 2017 01 10

புதுடெல்லி, சில பல்கலைக்கழகங்களில் நடந்த சம்பவங்கள் மீது காங்கிரசும் இடதுசாரி கட்சியும் பல புதுப்புது சாயங்களை பூசி வருகின்றன என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இடதுசாரி ஆதரவு மாணவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு மாணவர்களுக்கிடையே கலவரம் மூண்டது. இதில் தலையிட்ட போலீசார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சில பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும் புதுப்புதுப் சாயங்களை பூசி வருகின்றன என்று கூறியுள்ளார். பேச்சு மற்றும் கருத்து வெளியீடு சுதந்திரமானது நாட்டின் ஒருமைபபாட்டிற்கும் ஒற்றுமைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. இதற்கு ஆதரவும் கொடுக்கக்கூடாது என்று வெங்கையா நாயுடு கூறினார்.

குற்றச்சாட்டு:

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெங்கையா நாயுடு, சில பல்கலைக்கழகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும் பல்வேறு கருத்துக்களை கூறிவருவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றார். சில தவறான வழிகாட்டும் பிரிவினர் இளைஞர்களுக்கு தவறான வழிகளை காட்ட முயற்சி செய்கின்றன. மேலும் அந்த பிரிவினர் சமுதாயத்தில் பதட்டத்தை உருவாக்குவதோடு,மக்களையும் புண்படச் செய்கிறார்கள். அரசியல் சாசனத்தில் கருத்துக்கூறும் சுதந்திரம் பற்றி எந்த இடத்திலும் கேள்வி எழுப்பப்படாவிட்டாலும் சில இடங்களில் கூறுவதற்கு நியாயமான அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத உணர்வை யாரும் புண்படுத்த முடியாது.

ஆதரவு இல்லை:

நாட்டின் ஒருமைப்பாட்டினையும் ஒருங்கிணைப்பு பற்றியும் யாரும் கேள்வி கேட்க முடியாது. பிரிவினைவாத்திற்கு ஆதரவும் கொடுக்க முடியாது. பல தரப்பட்ட கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பான்மையானோர் கூறும் கருத்தாக இருந்தாலும் அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருந்தால் யாரும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காஷ்மீர் பிரிவினையை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதி என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களை பிரிவினை தீவிரவாதிகளின் சோதனைக்கூடங்களாக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அவ்வாறு சோதனைக்கூடங்களாக்க சில முயற்சிகள் நடந்துகொண்டியிருக்கின்றன. தீவிரவாதி அப்சல் குருவுக்கு நினைவு தினம் அனுஷ்டிக்க விரும்புகிறீர்களா? ஜனநாயகத்தின் கோயிலாக இருக்கும் பாராளுமன்றத்தை தாக்க முயன்ற தீவிரவாதிகளில் முக்கிய புள்ளி அப்சல் குரு. நாட்டில் அவசரநிலையை பிரகடனம் படுத்தியது காங்கிரசுதான்.  அப்போது அடிப்படை உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவசரநிலையை எதிர்த்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. ஆனால் தற்போது பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுகின்றன என்று வெங்கையா நாயுடு மேலும் கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்: