உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரை மலரும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை

புதன்கிழமை, 1 மார்ச் 2017      அரசியல்
Rajnath Singh 2016 10 2

பாலியா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரை மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதாவது மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6-வது கட்ட தேர்தலில் அரசியல் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பாலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் , பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். இந்த இரண்டு கட்சிகளும் மாநிலத்தை மண்குட்டையாக்கிவிட்டன. இந்த மண்குட்டையில் இருந்து தாமரை மலரும் என்று ராஜ்நாத் தெரிவித்தார். அதாவது தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில்  மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என்றார்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பிரித்தாலும் சூழ்ச்சி நடக்கிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கு உதாரணம் காயத்ரி பிரஜாபதி ஒரு உதாரணமாகும். அவர் மீது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்ட பிறகுதான் கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில சட்டசபை தேர்தலில் அமெதி தொகுதியில் காயத்ரி பிரஜாபதி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலேஷுக்கு பதில்:

மாநிலத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. வேண்டுமானால் மின்கம்பியை பாரதிய ஜனதா கட்சியினர் தொட்டுப்பார்க்கலாம். அப்போது மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறதா? இல்லையா? என்பது தெரியும் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ராஜ்நாத், மாநிலத்தில் 24 மணி நேரமும் சப்ளை செய்யப்படவில்லை. வீடுகளுக்கு மின்சாரம் வரவில்லை. ஆனால் தவறாமல் வீடுகளுக்கு மின்சார கட்டணம் செலுத்தச்
 சொல்லி பில் வருகிறது என்று கிண்டலாக கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: