முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருவேல மரங்களை ஒழிக்க சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உறுதி

புதன்கிழமை, 1 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் செவ்வாயக்கிழமை நடைபெற்ற சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் கருவேல மரங்களை ஒழிப்பது குறித்து அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர்.

 

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 2015-2016ஆம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற பணிகளின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு தலைமை தாங்கினார். சமூக தணிக்கையாளர் தணிக்காசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு வரவேற்றார்.

 

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு சிறப்பு தலைவராக பாலு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 2015-2016ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டு அவர்களது வேலை அட்டை சரிபார்க்கப்பட்டது. மேலும் இந்த ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்பவர்கள் நாளொன்றுக்கு ரூபாய் 203கூலியாக பெறுவது உறுதி செய்யப்பட்டது, மேலும் நிகழ்வின் போது அனைத்து பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டது,

 

தொடர்ந்து கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு ஊராட்சியில் கருவேல மரங்களை அனைவரும் ஒழிக்க ஊராட்சியோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்ட போது, கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 600 பேரும் அவரவர் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அழிக்க உறுதி ஏற்றனர்.

 

தொடர்ந்து கூட்டத்தில் 15 பேர்களுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, கொசுப்புழு ஒழிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. முடிவில் ஊராட்சி ஊழியர் பழனி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்