சமத்துவ மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      அரசியல்
Sarath-Kumar 2017 03 02

சென்னை, உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.இதில் தமிழகம் முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்க சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் காலை 10 மணிக்கு வந்தனர்.அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சரத்குமார் வந்ததும் தொண்டர்கள் கரகோ‌ஷம் எழுப்பினார்கள். பின்னர் கட்சியின் தேர்தல் முறைப்படி நடந்தது. இதில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளராக சரத்குமார் பெயரை திண்டுக்கல் மணிமாறன் முன்மொழிந்தார். இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர்.

அவைத்தலைவராக திண்டுக்கல் மணிமாறன், பொருளாளராக ஏ.எம்.சுந்தரேசன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து துணை பொதுச்செயலாளர்களும், மாவட்ட செயலாளர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சரத்குமார் மற்றும் மகளிர் அணி தலைவி ராதிகா சரத்குமாருக்கு நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சரத்குமார் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* தமிழகம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
* அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.
* விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும்.
* தமிழகத்தின் நீர் ஆதாரங்களை தடுக்கும் வகையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதையும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதையும் பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதையும் மத்திய- மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
* உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சேவியர், நாதன், கிச்சாரமேஷ், இ.சி.ஆர்.ராஜ், அவைத் தலைவர் பாலகிருஷ்ணன், கொளத்தூர் ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: