முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்க விளைவுகள் இல்லாமல் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும் துணைவேந்தர் வள்ளி பேச்சு

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -பக்கவிளைவுகள் இல்லாமல் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி மாணவர்கள் கண்டறிய வேண்டும் என்று கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி பேசினார்.

திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை சார்பில் பெருமூலக் கூறுப் பொருட்களின் பயன்பாட்டில் அண்மைக்கால முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். விழாவில் கருத்தரங்க மலரை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி வெளியிட்டு பேசியதாவது

நமது வாழ்க்கைக்கான பாதுகாப்பில் வேதியியலின் பங்கு அதிகளவு உள்ளது. மனித உடலில் உள்ள மரபணுக்கள், பார்போஹைட்ரேட் சுரபிகள் அனைத்திலும் பெருமூலக்கூறுகள் அதிகமாகவும், தன் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் திகழ்கின்றன. உடல் இயக்கத்தில் இந்த மூலக்கூறுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மருத்துவம், மருந்து பொருட்கள் தயாரிப்புகளில் பெரும் மூலக்கூறுகளின் பயன்பாடும் ஆய்வுகளும் நிறைந்துள்ளன. நானோ தொழில்நுட்பம், உயிர் வேதியியல் தொழில்நுட்பம், உலோக பொருட்களில் ஏற்படும் அரிமானம், பொருட்கள் தயாரிப்பு சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் வேதியியலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இன்று அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. விலை குறைவு என்பதால் பலரும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்த பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளுக்கு தீர்வு காண வேண்டும். பக்க விளைவுகள் இல்லாமல் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும். அறிவியல் துறைகள் அனைத்தும் வேதியியல் துறையோடு இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு பயன்படும் பல கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரலாம் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் அறிவியல் துறைகளின் தலைவர் சுந்தரவடிவேலு, வேதியியல் துறை தலைவர் மீனாட்சி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பேராசிரியர் சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இக்கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்