முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் ஸ்ரீபெரிய முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் பாராம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. அய்யம்பாளையத்தில் பாராம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் இரட்டை மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்று வந்தது. உச்சநீதி மன்ற தடை காரணமாக 2 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியதால் அய்யம்பாளையத்தில் ஊர்பொது மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி பெறப்பட்டது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாடிவாசல், பார்வையாளர்களுக்கான மேடை மற்றும் தடுப்புகள் அமைக்கும் பணிகள் முடிந்தன. நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் , மாடு பிடி வீரர்களுக்கும் முன்பதிவு மற்றும் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. மாடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
       மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரபணியாளர்கள் மேற்கொண்டனர். இப்போட்டியில் திண்டுக்கல்,மதுரை, திருச்சி, தேனி, விருதுநகர், சிவகங்கை, சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து சென்றன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
 மாடுகளை பிடிக்க முயன்றபோது மாடுபிடி வீரர்கள் 20 பேரும், போட்டியை பார்க்க வந்த பொதுமக்கள் 15 பேரும் காயமடைந்தனர். மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக பீரோ, கட்டில், மிக்சி, தங்கக்காசுகள், வெள்ளிக்காசுகள், குக்கர், கேஸ் அடுப்புகள், பேன் போன்ற பல்வேறு பரிசுகள் விழாவில் வழங்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்த்தனர்.
 இவிழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், ஆத்து£ர் தாசில்தார் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ், கருணாகரன், கருப்புசாமி ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்