முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன்கடைகளில் அனைத்து பொருட்களும் மக்களுக்கு சீராக விநியோகம் செய்யப்படுகிறது அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

மதுரை,-     ரேஷன்கடைகளில் பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் சீராக விநியோகம் செய்யப்படுகிறது என்றும் எதிர்கட்சிகள் கூறுவது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
       செல்லூர் கே.ராஜூ ஆய்வு
                 மதுரை  மாவட்டம், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காளவாசல் பகுதி மதுரா கோட்ஸ் அருகில் உள்ள கூட்டுறவு நியாயவிலை கடையில் மாவட்ட வருவாய் அலுவலர்     கூ.வேலுச்சாமி முன்னிலையில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
            இந்த ஆய்விற்கு பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
       இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பொதுவிநியோகத்  திட்டத்தின் கீழ்விலையில்லா 20 கிலோ அரிசியை தமிழக அரசு மக்களுக்கு வழங்குகிறது. தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் மூலம்  80 சதவிகித மக்கள் பயன்பெறுகின்றனர். ஏழை மக்களின் பசிப்பிணியை போக்கும் வண்ணம் கடந்த 2011-ல் மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். இவர்களுக்கு 2,95,509 மெட்ரிக் டன் அரிசி, 32,685 நியாயவிலைக்கடைகளின மூலம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
         சீராக விநியோகம்
          அதே போல் 31,868 மெட்ரிக் டன் சர்க்கரையும், 13,602 மெட்ரிக் டன் கோதுமையையும், 23,638 கிலோ லிட்டர் மண்ணெய்யும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, சர்க்கரை, கோதுமை ஆகியவை பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பருப்பு, பாமாயில், சிறப்பு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றது.அதே போல், சிறிய மலைப்பகுதி கிராமத்திற்கு மாதத்திற்கு 4 நாள் சென்று அவர்களுக்கு பொருட்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு கிலோ பருப்பு ரூ.40க்கு வழங்கப்பட்டது அப்போது வெளிமார்க்கெட்டின் விலை ஒரு கிலோ ரூ.70 தான் தற்போது தமிழக அரசு ஒரு கிலோ பருப்பை ரூ.30 க்கு வழங்குகிறது அதற்கு தற்போது வெளிமார்க்கெட்டின் விலை ரூ.100க்கு மேல் உள்ளது மேலும் பருப்பு மற்றும் பாமாயில் கடந்த 2006-11 ஆண்டு காலத்தில் 30 சதவிகித மக்களுக்குத்தான் வழங்கப்பட்டது தற்போது 80 சதவிகித மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
       மேலும் ஒவ்வொரு கடைகளுக்கும் 300 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதை மக்கள் கேட்டு விரும்பி வாங்கி செல்கின்றனர். அரிசி, கோதுமை,சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவை மக்களுக்கு 100 சதவிகிதம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நியாய விலைக்கடைகளில் மக்கள் வாங்கிய பொருட்களுக்கு உடனடியாக அவர்களின் கைப்பேசிமூலம் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் வாங்காத பொருளுக்கு குறுந்தகவல்கள் வந்தால் 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி  எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் அப்படி தவறுகள் உண்மை என்றால் அதுதொடர்பான புகாரில் தெரிவிக்கப்படும் ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
   எதிர்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டு
              இப்படிப்பட்ட நிலையில் ரேஷன்கடைகளில் பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். குறிப்பாக பா.ஜ.க.மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான செய்தியை கூறிவருகிறார். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பொதுவிநியோக திட்டத்திற்கு ரூ.1850 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் ஏழை,எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகளில் தரமான பொருட்களை வழங்க இந்த கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல் அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஆனால் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை சுமத்துகின்ற எதிர்கட்சிகள் அவரது கருத்துகளை கேட்டறிந்து அதன்பின் தங்களது கருத்துகளை கூறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
     இந்நிகழ்ச்சியில் மண்டல இணை பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன், மதுரை பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மதுரை ஆவின் சேர்மன் சி.தங்கம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் புதூர் துரைப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்