முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழை_ பணக்காரன் என்ற பேதமில்லாமல் அனைவருமே நம் நாட்டின் சொத்து என்றால் மிகையாது

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      நீலகிரி

ஏழை_பணக்காரன் என்ற பேதமில்லாமல் அனைவருமே நம் நாட்டின் சொத்து என்றால் அது மிகையாகாது என ஊட்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் நீலகிரி கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பேசினார்.

                                     உயிரிழப்புகளை தடுப்பது

ஊட்டியிலுள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பயிற்சி அரங்கில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். மாவட்ட எஸ்.பிமுரளி ரம்பா முன்னிலை வகித்து பேசினார். கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்த கருத்தரங்கின் நோக்கமே விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதுதான். ஏனென்றால் இந்த நாட்டினுடைய ஒவ்வொரு படைப்புக்கும் காரணம் ஆண்டவன். கடவுளின் படைப்பை எடுப்பதற்கும், அழிப்பதற்கும் யாருக்குமே சட்டத்தில் இடமில்லை. அதேபோல் ஒவ்வொரு உயிரும் நம் நாட்டின் சிறப்பு. அது யாராக இருந்தாலும். அதாவது ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் அனைவருமே நம் நாட்டின் சொத்து என்றால் அது மிகையாகாது. அந்த சொத்தை பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு என்பதை மறந்துவிடக்கூடாது.

                                        கவனத்துடன் செயல்பட வேண்டும்

உலகளவில் வாகன விபத்துக்களை கணக்கெடுத்தால் இந்தியாவில் தான் அதிகமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகப்படியான விபத்துக்கள் நடப்பதில் முதலிடம் வகிக்கின்றது. எனவே இது சிந்திக்க வேண்டிய நேரமிது. பேருந்து ஓட்டுநர்களை நம்பி 50 பேர் பேருந்தில் பயணிக்கின்றனர். அந்த 50 பேரையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே வாகனங்களை ஓட்டும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் 2014ம் ஆண்டு 61,688 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் 15,190 பேர் இறந்துள்ளனர். 2015ம் ஆண்டில் 69,059 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் இறந்தவர்கள் 14,642 பேர். இதை கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 42 பேர் விபத்துக்களினால் உயிர்களை பலிகொடுக்கின்றனர்.

                       மனித தவறுகள்

நமது மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 250 முதல் 300 விபத்துக்கள் நடக்கின்றன. இதில் சராசரியாக 30 முதல் 35 பேர் வரை இறந்து கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது உயிர்களை காக்க வேண்டிய தருணம் அதிகமாக உள்ளது.கடைசியாக உயிரிழப்புகளை தடுக்கவாவது நாம் முயல வேண்டும். விபத்துக்கு காரணம் மனித தவறுகள் தான். அதற்காகத்தான் இந்த கருத்தரங்கு கூடியுள்ளது.   எனவே வாகனங்களை ஒட்டும்போது தொலைபேசியை பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தோடு வாகனம் ஓட்டுவது, சிக்னலை கவனிக்காமல் செல்வது போன்றவைகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசு விபத்தை தடுப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாள்கிறது. அதில் ஒன்றுதான் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த இக்கருத்தரங்குகள். இதன் மூலமாக மக்களின் மனதில் மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தவிர்க்க முடியும். இவ்வாறு கலெக்டர் பொ.சங்கர் பேசினார்.

கருத்தரங்கில் ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் மோரீஸ் சாந்தா குரூஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பொ) டாக்டர் இரியன் ரவிக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியக்குமார், டிராவல்ஸ் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலக தட்டச்சர் சக்திவேல் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் பவர்பாயிண்ட் மூலம் ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு மற்றும் வாகன பராமரிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்