முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ரூ.172 கோடி மதிப்பிலானநிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது : அமைச்சர் மணியன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நேற்று (07.03.2017) நடைபெற்றது. இவ்விழாவில் 1,30,110 விவசாயிகளுக்கு ரூ.172 கோடி மதிப்பிலான இடுபொருள் நிவாரணத் தொகைக்கான ஆணைகளை கைத்தறி மற்றம் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

விழாவில் கைத்தறி மற்றம் துணிநூல்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, " தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி தற்போது நிலவுகிறது. வழக்கமாகப் பெய்யும் வடகிழக்குப் பருவ மழை தற்போது 32 சதவீதமாகக் குறைந்து விட்டது. பருவகால மாற்றம் ஏற்பட்டு அதனால் விவசாயம் பொய்த்து விட்டது. மழைக்காலங்களில் நீர்நிலைகளில் தேங்கிய நீர் போக எஞ்சிய உபரி நீர் ஆறுகளின் வழியே சென்று கடலில் கலந்து விடுகிறது. இவ்வாறு மழை உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்கும் பொருட்டு நமது மாவட்டத்தில் கள்ளிமேடு அடப்பாற்றில் ஆசிய வங்கி உதவியோடு தடுப்பணை கட்டவும், அரச்சந்திரா நதியினை அகலப்படுத்தி, சீர்செய்யவும் புரட்சித்தலைவி அம்மா அனுமதி அளித்து, அதன்படி பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும். பணிகள் நிறைவடைந்தால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பெருகி, இப்பகுதி நன்கு செழிப்பாக மாறும்.

தமிழ்நாட்டில் 33 சதவீதத்திற்கு மேல் 50 லட்சத்து 35 ஆயிரத்து 127 ஏக்கர் நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு, 32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்கு, நெற்பயிர் மற்றும் இதரப் பாசனப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5465-ம், மானாவாரிப் பயிர்களுக்கு ரூ.3000ம், நீண்டகாலப் பயிர்களுக்கு ரூ.7287-ம், பட்டுப் புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3000-ம் வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,30,110 விவசாயிகளுக்கு ரூ.172 கோடி மதிப்பிலான இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த தொகை மின்னணுப் பண பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்." என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி(சீர்காழி), வி.ராதாகிருஸ்ணன்(மயிலாடுதுறை), கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆசைமணி, தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், தேத்தாக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.கிரிதரன், நாகப்பட்டினம் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.சந்திரமோகன், வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், இணை இணக்குநர்(வேளாண்மை)சேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்