முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் மாசித் திருவிழா சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா

புதன்கிழமை, 8 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழாவின் 8ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளிதெய்வானை அம்பாளுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பச்சை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சு£வமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பரண்டு ராமராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்