முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் சொக்கர் கோவில் பிரமோற்சவ விழாவில் தேர்த்திருவிழா

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      விருதுநகர்
Image Unavailable

  ராஜபாளையம்,-ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு மகாப்ரமோற்சவம் 10 நாட்கள் ராம்கோ சேர்மனும் பரம்பரை அறங்காவலருமான பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா தலைமையில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற பிரமோற்சவ விழாவில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் செய்தனர்.

விழாவில் முதல் 6 நாட்கள் அம்மன் மற்றும் சுவாமி சிம்மம், கற்பகவிருட்சம், ஹஸ்தியாழம், அதிகார நந்தி, காமதேனு, கைலாச வாகனம், அன்னம், கிளி, யானை, ரிசபம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார்கள். 7-ம் நாள் விழாவில் சுவாமி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, பூப்பல்லக்கில் வீதி உலா நடைபெறும். 8-ம் திருநாளில் தெப்போற்சவம் நடைபெற்று அம்மன், சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும். மேலும் விழா நாட்களில் திருமுறைபாராயணம், கர்நாடக இசை நிகழ்ச்சி, நந்தனார் சரித்திர கதையுடன் இசைக்கச்சேரி, வீணை இசை நிகழ்ச்சி, கீர்த்தனைகள், இசை சொற்பொழிகள் உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் முக்கிய விழாவான 9-ம் நாளில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. சொக்கர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். ராம்கோ சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா மற்றும் அவரது துணைவியார் சுதர்சனம் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேர் காந்தி கலைமன்றம், ஜவஹர்மைதானம், சிங்கராஜா கோட்டைத் தெரு, கோதண்டராமர் கோவில் வழியாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நாளை நடைபெறும் 10-ம் நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் விழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை ராம்கோ நிர்வாகத் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்