பா.ஜ.வை ஆட்சிக்கு வருவதை தடுக்க பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி: அகிலேஷ் யாதவ் சூசக தகவல்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      அரசியல்
Akhilesh Yadav 2017 1 22

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வராமல் செய்ய பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. தேர்தலுக்கு பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பில் உத்தரப்பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பா.ஜ.வை தடுப்போம்:

இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்  லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய அனைத்து வழிகளையும் கையாளுவோம் என்று கூறியுள்ளார்.

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த விடமாட்டோம். மேலும் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியானது ரிமோட் கண்டோரல் ஆட்சி செய்வதையும் விடமாட்டோம். மாநிலத்தில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். ஆனால் ஆட்சி அமைக்க தேவைப்பட்டால் கூட்டணி அமைப்பது குறித்து யோசிப்போம் என்றார்.

சொந்தக்காரர்:

தேர்தலுக்கு பின்னர் ஆட்சி அமைப்பதற்காக கூட்டணிக்கு தயாராக இருக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அகிலேஷ், கூட்டணி குறித்து நான் இன்னும் பேசவில்லை. சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணியானது ஆட்சி அமைக்கும் அளவுக்கு  வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றார். இருந்தபோதிலும் பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி என்னுடைய சொந்தக்காரர். தேவைப்பட்டால் அவருடைய உதவியை பெறுவேன். இல்லாவிட்டால் அவருடன் சேர்ந்து செல்வோம். ஆனால் அது குறித்து இப்போது பேசுவது சிரமம் என்றும் அகிலேஷ் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது மாயாவதி என்னுடைய அத்தை என்று அகிலேஷ் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அகிலேஷின் இந்த பேட்டியால் தேர்தலுக்கு பின்னர் கூட்டணிகள் மாறலாம் என்று தெரிகிறது.
மேலும் உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஆனால் ராகுல் குறித்து மாயாவதி எதுவும் கூறவில்லை. மேலும் ராகுல் காந்தியும் பாரதிய ஜனதாவால் நாட்டிற்கு தீங்கு ஏற்படும் என்றும் ஆனால் பகுஜன்சமாஜ் கட்சியால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும் ராகுல் தெரிவித்தார்.
அதேநேரத்தில் இந்த நேரத்தில் எதுவும் கூறுவது சரியாக இருக்காது என்று மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: