முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீ வைப்பு சம்பவத்தில் 22 சிறுமிகள் பலி: கவுதமாலாவில் 3 நாள் தேசிய துக்கம் அனுசரிப்பு

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

சான் ஜோஸ் பினுலா  - கவுதமாலா நாட்டில் உள்ள அரசு காப்பகத்தில் தீ வைக்கப்பட்டதில் 22 சிறுமிகள் கருகி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தையொட்டி அந்த நாட்டில் 3 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பாலியல் புகார்
மத்திய அமெரிக்க நாடு, கவுதமாலா. அந்த நாட்டின் தலைநகரான கவுதமாலாவில் இருந்து 25 கி.மீ. தென்மேற்கில் அமைந்துள்ள சான் ஜோஸ் பினுலா நகரில் அரசு சார்பில் நடத்தப்படுகிற குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது.  அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு, அந்த காப்பகத்தின் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அங்கு தரமான உணவு வழங்கப்படாததாகவும் புகார்கள் எழுந்தன.

திடீர் கலவரம்
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அங்கு தங்கி இருந்த இளைஞர்கள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சில இளைஞர்கள் அங்கு மெத்தைகளில் தீ வைத்து விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதில் தீ மளமளவென பரவியது. அங்கு தங்கி இருந்த சிறுமிகள் ஓலமிட்டவாறு நாலாபுறமும் ஓடினர். ஆனாலும் தீக்கு  தப்பிவிட முடியவில்லை.

22 சிறுமிகள் சாவு
22 சிறுமிகள் தீயில் சிக்கி கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். அவர்களது உடல்கள் அடையாளம் காண இயலாத வகையில் கரிக்கட்டைகள் ஆகி விட்டன. சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தேசிய துக்கம்
அந்த கொடிய சம்பவத்துக்கு அந்த நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 நாள் தேசிய துக்கமும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்