ஓசூரில் கோலாகலமாக நடந்தது சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா :பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
hsr a

 

ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு மூன்று மாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மலை மீது பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பாள் சமேத சந்திர சூடேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தேர் திரு விழா முன்னிட்டு கடந்த மாதம் பால் கம்பம் நடப்பட்டு விமரிசையாக தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 5&ம் தேதி முதல் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் பூஜைகளுடன் விழா நிகழ்ச்சிகள் மற்றும் தேர் கட்டும் நிகழ்ச்சிகள் தொடங்கியது.இதைத்தொடர்ந்து சாமிக்கு ருத்ராபிஷேகம், புஷ்ப அலங்காரம், பல்வேறு வாகன உற்சவ நிகழ்ச்சிகள், திருக்கல்யாண உற்சவம் உள்பட பல்வேறு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை தேருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. கல்யாண சந்திர சூடேஸ்வரர் கோவில் முன்பு தேரோட்டம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சந்திர சூடேஸ்வரர் சாமி உற்சவரும், மற்றொரு தேரில் மரகதாம்பாள் உற்சவரும் வலம் வந்தனர். மேலும் சிறிய தேரில் விநாயகரும் விலம் வந்தனர். இந்த தேர்த்திருவிழாவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தேர் கமிட்டி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மனோகரன் அனைவரையும் வரவேற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் உதவி கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ், நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்ப்பேட்டை வீதிகளில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது Òஓம் நமச்சிவாயா, ஹரஹர மகாதேவ, கோவிந்தா, கோவிந்தாÓ என்ற பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இந்த விழாவில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.விழாவை முன்னிட்டு ஓசூர் தேர்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்பினர் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், பானகரம், அன்னதானம், சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டன. விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி மகேஷ்குமார் உத்தரவின் பேரில் 300&க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் வரும் தேர்ப்பேட்டை சாலையிலும், மலை மீதும் மலை கோவில் சுற்றுப்புற பாதைகளிலும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். நேற்றைய தேர்த்திருவிழாவில் பாஜ மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ்,நகர செயலாளர் சங்கர்,பஸ்தி சீனிவாசன், ஓசூர் மலர் வியாபாரிகள் சங்க தலைவர் திம்மராஜ், செயலாளர் மூர்த்திரெட்டி,பொருளாளர் கிரஷ்ணப்பா, பானுடூல்ஸ் சரவணன்,அபிநயா டெக்ஸ்டைல்ஸ் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இன்று (திங்கட்கிழமை) இரவு வாணவேடிக்கைகளுடன் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. நாளை செவ்வாய்க்கிழமை) மாலை தேர்பேட்டை தெப்பகுளத்தில் தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: