சென்னை மெரீனா கடலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      ஆன்மிகம்
parathasarathy perumal 2017 3 12

சென்னை : மாசி மகத்தையொட்டி சென்னை மெரினா கடலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

மாசி மகம் என்றதும், கும்பகோணம் மாமாங்கக்குளம் நினைவுக்கு வரும். மாமாங்கம் என்னும் மகா மகம் திருவிழா. அன்று, அந்தப்புனிதமான அமிர்தக் குளத்தில் நீராடினால் பாவங்கள் அழிந்து புனிதம் சேரும் என்பது ஐதீகம். மேலும் பாரதத்தில் உள்ள அனைத்துப் புனித நதிகளிலும் நீராடிய பலன்களைப் பெறலாம். அதேபோல் அந்த நன்னாளில் கடலாடு தீர்த்தமும் போற்றப்படுகிறது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பாகக் கொண்டாடப்படுவது மகாமகம். இத்திருநாள் மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று முருகன், சிவன், பெருமாள் என்று கடலோரம் கோயில் கொண்ட கடவுளர் உட்பட அனைத்துத் திருக்கோயில்களிலும் மாசி மகத் திருவிழா காணுதல் உண்டு. அவ்வகையில் அந்தந்தப் பெருமாள் கோயில்களில் உள்ள திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் நீராட்டம் பெறுவார். கடலோரம் குடி கொண்ட பெருமாளோ, கருட வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளுவார்.


ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருளி, வழக்கமாக தெற்கு மடாவீதி, துளசிங்க தெருவில் திரும்பி மெரீனா கடற்கரைக்கு அதிகாலை வேளையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்.

இன்று மாசி மகம். இதையொட்டி நேற்று காலை சென்னை மெரினா கடற்கரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5.30 மணியளவில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், தெற்கு மாட வீதி, டி.பி. கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, நல்லதம்பி தெரு, பைகிராப்ட்ஸ் சாலை வழியாக கடற்கரையில் சீரணி அரங்கம் இருந்த இடத்தின் பின்புறம் கடற்கரைக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பார்த்தசாரதி சுவாமி மாட வீதி மற்றும் குளக்கரையை சுற்றி கோவிலை வந்தடைந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் காவேரி மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: