முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி கொடுக்கும் முகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை, அயல்நாட்டு வேலைவாய்ப்புத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் இம் முகாமில்; தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற்றன.தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் கலெக்டர் எம்.ரவி குமார், தலைமையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தனியார் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 141 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது:-மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் வகையில் வருடத்திற்கு 3 வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து 17.12.16 அன்று கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியிலும், 21.01.17 அன்று சாயர்புரம் போப் கலைக்கல்லூரியில் வைத்தும் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் தகுதியான பலர் வேலைவாய்ப்பை பெற்றனர். வேலைவாய்ப்பு முகாமின் நோக்கம் அதிக அளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவது ஆகும். காலத்திற்கு ஏற்ற கல்வியை தந்தவர் அம்மா அவர்கள். கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கித்தந்தார்கள். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையினை மாற்றி அனைவரும் தேர்வில் பங்கேற்று வேலைவாய்ப்பினை பெற உதவி செய்ததோடு, இது போன்ற தனியார் வேலைவாய்ப்பினையும் பெருக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வேலைவாய்ப்பினை அதிகரித்தார்கள். மேலும் இந்தியாவில் தமிழகத்தில் தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி பல லட்சம் பேர் பயன் பெற காரணமாக இருந்தார்கள். மேலும் மறைந்த முதல்வர் அம்மா தமிழகத்தில் இரண்டு இடங்களில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தினை அறிவித்தார்கள். ஆதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஆலந்தழையும் இடம் பெற்றுள்ளது. பல் வேறு வகைகளில் அரசு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வருகிறது. எனவே அரசு வழங்கிய இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இம்முகாமில் மொத்தம் 68 நிறுவனங்கள் பங்குபெற்றன. 2367 பேர் பதிவு செய்துள்ளனர். இம்முகாமில் இன்று மட்டும் 312 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் 435 பேர் முதல் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நடத்தப்படும் அடுத்த கட்ட தேர்வில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப்., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, மகளிர் திட்ட இயக்குநர் இந்துபாலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன், மாவட்ட திட்ட மேலாளர் (புதுவாழ்வு திட்டம்) கர்ணன், தாட்கோ மேலாளர் யுவராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்-ஊரகவளர்ச்சி) மைக்கேல், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராஜராஜன், ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி கலைக்கல்லூரி தலைவர் சொக்கலிங்கம், செயலர் சுப்புலட்சுமி, முதல்வர் வாசுகி, மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன,; தூத்துக்குடி வட்டாச்சியர் சங்கரநாராயணன், உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்