சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது-
சரக்கு வாகனங்கள்
சரக்கு வாகனங்களில் சரக்குகளை ஏற்றிச்செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் ஆட்களை ஏற்றிச்சென்று விபத்துகள் ஏற்படுவது தற்சமயம் அதிகரித்துள்ளது. பத்திரிகை செய்திகள் மூலமாகவும், வாகன தணிக்கையின் போதும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கு புறம்பாக ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது என பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக இதுபோன்று சரக்கு வாகனங்களில் அனுமதிக்கு புறம்பாக ஆட்களை ஏற்றிச்சென்றதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
ஓட்டுநர் உரிமம் ரத்து
எனவே சரக்கு வாகனங்களிலும், பிக்கப் போன்ற வாகனங்களிலும் அனுமதிக்கு புறம்பாக ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வாகன சோதனையின்போது கண்டறியப்பட்டால் அந்த வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, வாகனத்தில் அனுமதிச்சீட்டு ரத்து செய்வதுடன் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களில் மூட்டைகளுக்கு மேல் ஆட்கள் அமர்ந்து செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.