குடிமராமத்து பணியின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்:கலெக்டர் வா.சம்பத் பேச்சு

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      சேலம்
4

 

தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்து பணிகளை சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் வேம்பனேரியில் நேற்று (13.03.2017) கலெக்டர் வா.சம்பத், தொடங்கி வைத்தார். குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்து கலெக்டர் தெரிவித்ததாவது : 2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், நீர் ஆதாரப்பணிகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய பணியாக நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி இவ்வறட்சியினை எதிர்கொள்ளவும், மழை நீரை திறம்பட சேமித்தும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 30 மாவட்டங்களில் 1519 பணிகள் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்டம் நாமக்கல் மூலமாக 18 பணிகள் 1.6 கோடி மதிப்பிலும் மேட்டூர் அணை கோட்டத்தின் மூலம் 30 பணிகள் 1.5 கோடி மதிப்பிலும் என மொத்தம் 48 பணிகள் 3.1 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்டம் நாமக்கலில் 87 ஏரிகளும் மேட்டுர் அணை கோட்டத்தில் 15 ஏரிகளும் என மொத்தம் 105 ஏரிகள் 100 ஏக்கருக்கு மேல் பாசன வசதியுடன் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 48 ஏரிகள் கலிங்கு சீரமைத்தல், மதகு சீரமைத்தல், வரத்து வாய்கால் தூர்வார்தல் மற்றும் ஏரிக்கரை பல படுத்தல் ஆகிய பணிகள் பொதுப்பணி துறையின் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்து பணியானது எடப்பாடி வட்டத்தில் இரண்டு பணிகள் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் வேம்பனேரி ஏரி, வெள்ளாளபுரம் ஏரி, குண்டனேரி ஏரி மற்றும் கால்வாய்களை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டம் மூலம் புனரமைக்கும் பணியானது இன்று (13.03.2017) துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏரிகள் புரனமைக்கப்பட்டு நீர் நிரம்பும் பட்சத்தில் வெள்ளாளபுரம் ஏரியின் மூலம் வெள்ளாளபுரம் மற்றும் சமுத்திரம் கிராமங்களில் 494.01 ஏக்கர் விவசாய நிலங்களும், வேம்பனேரி ஏரியின் மூலம் வேம்பனேரி மற்றும் புதுப்பாளையம் கிராமங்களில் 301.40 ஏக்கர் விவசாய நிலங்களும், குண்டனேரி ஏரி மூலம் எருமைப்பட்டி கிராமத்தில் 112.42 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று விவசாய பெருமக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்சிலி ராஜ்குமார், சரபங்கா வடிநில உட்கோட்ட செயற்பொறியாளர் குனசேகரன், உதவி செயற்பொறியாளர் சௌந்திர ராஜன், உதவிப்பொறியாளர்கள் வேத நாராயணன், பத்ரி நாராயணன், பிரசாத், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: