முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிமராமத்து பணி அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், அரபோது கிராமத்தில் பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறை, குண்டாறு வடிநிலக்கோட்டம் சார்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் அரபோது கண்மாயினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு தமிழகத்தில் தற்போது நிலவும் வறட்சியினை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும், பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைக்கும் பண்டைய 'குடிமராமத்து" திட்டத்திற்கு புத்துயிர் அளித்திட உத்தரவிட்டுள்ளது.  இதன்மூலம் தமிழகத்தில் 30 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பில் 1,519 குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 
 அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப்பணிகளை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்கள். அதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், அரபோது கிராமத்தில் உள்ள கண்மாயில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் கண்மாய் கரையினை பலப்படுத்துதல், கால்வாய்களை சரிசெய்தல் உள்ளிட்ட குடிமராமத்து திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறை குண்டாறு வடிநிலக் கோட்டம் மூலம் முதுகுளத்தூர் வட்டத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பில்  அரபோது கண்மாயிலும், கடலாடி வட்டத்தில் ரூ.58.90 லட்சம் மதிப்பில்  இருவேலி, கோலிகுளம், பி.கீரந்தை, பேய்குளம், சொக்கானை, இதம்பாடல் ஆகிய 6 கண்மாய்களிலும், கமுதி வட்டத்தில் ரூ.41.70 லட்சம் மதிப்பில் பாப்பாகுளம், கே.வேப்பங்குளம், டி.கள்ளிகுளம், பாப்பனம், அ.தரைக்குடி, அபிராமம், அரியமங்களம் ஆகிய 7 கண்மாய்களிலும் ஆக மொத்தம் ரூ.100.60 இலட்சம் (ரூ.1கோடி) மதிப்பில் 14 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 
 குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் கரையினை பலப்படுத்துதல், வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல், கண்மாயில் உள்ள கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் குணசேகரன், உதவிப் பொறியாளர் பூமிநாதன் உள்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்