டெல்லி மாநகராட்சி தேர்தலில் புதுமுகங்களை நிறுத்த பா.ஜ. முடிவு

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      அரசியல்
bjp flag(N)

புதுடெல்லி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் தற்போதுள்ள வார்டு உறுப்பினர்கள் போட்டியிட பாரதிய ஜனதா  தடைவித்திருக்கிறது. அனைத்து வார்டுகளிலும் புதுமுகங்களை நிறுத்த பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் டெல்லி மாநகராட்சியை பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருகிறது. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் முயற்சி செய்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பாரதிய ஜனதா இந்த புதிய யுக்தியை கையாண்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்திற்கு இணங்க இந்த புதிய திட்டத்தை பாரதிய ஜனதா கையாண்டுள்ளது.

டெல்லி பாரதிய ஜனதா தலைவர் மனோஜ் திவாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் இதை தெரிவித்தார்.

இந்த முடிவை நாங்கள் ஒருமனதாக எடுத்துள்ளோம். தற்போதுள்ள வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களுக்கு டிக்கெட் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். தற்போதுள்ள வார்டு உறுப்பினர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் கூட டிக்கெட் கொடுக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக புதிய முகங்களுக்கு டிக்கெட் கொடுக்கப்படும். தற்போதுள்ள பாரதிய ஜனதா வார்டு உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் முயற்சி செய்கின்றன. இதை தடுக்கும் வகையில் புதிய முகங்களுக்கு வார்டுகளில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்படும் என்றும் திவாரி தெரிவித்தார்.

இதனால் உட்கட்சி பூசல் ஏற்படாதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு அதை திவாரி மறுத்தார். பாரதிய ஜனதாவும் பாரதிய ஜனதாவில் உள்ள மக்களும் பதவிக்காக உழைப்பவர்கள் அல்ல. கட்சிக்காக உழைப்பவர்கள் என்று திவாரி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: