முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்க தடை இல்லை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என்றும் அவர் உடனே சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பா.ஜனதாவுக்கு ஆதரவு
கோவா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா வாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேட்சைகள் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மனோகர் பாரிக்கர் முதல்வராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகாராஷ்டிரா வாடி கோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தனர்.

ஆட்சி அமைக்க அழைப்பு
இதனால் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து கவர்னர் மிர்துளா சின்காவை மனோகர் பாரிக்கர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் கொடுத்தார். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டு மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். சட்டசபையில் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ராஜினாமா செய்தார்
கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் நேற்று மாலை பதவி ஏற்பார் என்றும் அவருடன் மேலும் 8 மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. கோவா முதல்வராக பதவி ஏற்க இருப்பதையொட்டி மனோகர் பாரிக்கர் ராணுவ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் வகித்த ராணுவ இலாகா நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

காங்கிரஸ் வழக்கு
இந்த நிலையில் மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க கவர்னர் மிர்துளா சின்கா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக விளங்குகிறது. அதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க கவர்னர் முதலில் காங்கிரசுக்குத்தான் அழைப்பு விடுக்க வேண்டும். எனவே மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் கேள்வி
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேகர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதிகள் காங்கிரசுக்கு சரமாரியாக கேள்விகள் விடுத்தனர். “உங்களை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை எத்தனை பேர்? உங்களிடம் ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால் கவர்னர் மாளிகை முன் தர்ணா கூட நடத்தலாம். உங்களை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை அளிக்கலாமே” என்றனர்.

தடை விதிக்க மறுப்பு
தொடர்ந்து மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என்றும் அவர் உடனே சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

மெஜாரிட்டியை நிரூபிக்க ...
கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்கலாம். அதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். அதற்கு வசதியாக தேர்தல் கமி‌ஷன் தனது அனைத்து நடைமுறைகளையும் 15-ந் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். 16-ந்தேதி சட்டசபையை கூட்ட வேண்டும். சட்டசபையை கூட்டுவதற்கான நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும். அன்று காலை 11 மணிக்கு புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றதும் மற்ற அலுவல்கள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும்.

தாக்கல் செய்யவில்லை
பா.ஜனதா தன்னை ஆதரிக்கும் 21 எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா கோமந்த வாடி மற்றும் கோவா பார்வர்டு கட்சி, சுயேட்சைகள் ஆதரவு தங்களுக்கு இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் காங்கிரஸ் தாக்கல் செய்யவில்லை. காங்கிரசின் கோரிக்கைகள் அனைத்தும் சட்டசபையில் பலத்தை நிரூபிப்பதன் மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். எனவே காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்