முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      கோவை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடசித்தூர் ஊராட்சியில் குருநல்லிபாளையம் வாய்கால் பகுதியில் இன்று (14.03.2017)பொதுப்பணித்துறை பரம்பிக்குளம் ஆழியாறு வடிநில வட்டம் மூலம் குடிமாராமத்து திட்ட பணிகள் துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி   சட்டப்பேரவைத்துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்  ஆகியோர், வரத்துக்கால்வாய்க்கான சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பேசுகையில்,

          2016ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்த வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும் நீர் ஆதார பணிகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய பணியாக மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும் நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும் நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

          நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பகுதியாக முதல்கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்க பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாசன அமைப்பின் சில பகுதிகள் விவசாயிகளால் பராமரிக்கப்பட்டு குடிமராமத்து என்ற பெயரில் புழக்கத்தில் உள்ளது. குடிமராமத்து என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை நிர்வகித்தல் ஆகும்.

          குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள் ஏரிகள் மதகுகள் மற்றும் பிற நீர் நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல் பலப்படுத்துதல் மற்றும் கலிங்குள் மதகுகளை மறுகட்டுமானம் செய்தல் நீர் வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல் மற்றும் நீர் வழிந்தோடிகளை பழுதுபார்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்த மதிப்பீட்டில் 10 சதவீத மதிப்பீட்டுத் தொகை பாசன சங்கங்களிலிருந்து உழைப்பாகவோ அல்லது பண பங்காளிப்பாகவோ பெறப்பட்டு பணிகளை அவர்களே மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

          முதற்கட்டமாக திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 1519 பணிகள் ரூ.100 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிட்டு  தமிழ்நாடு முதலமைச்சர்  இப்பணியினை துவக்கி வைத்ததுடன் தொடர்ந்து  கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 50 பணிகள் ரூ.231.57 இலட்சம் மதிப்பீட்டில் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,29,137 ஏக்கர் பாசன பகுதிகள் பயன்பெறும் மேலும் பாசன பகுதிகளிலுள்ள கால்வாய்கள் தூர்வார்ப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்படுவதுடன் சேதமடைந்த மதகுகள் மற்றும் கட்டுமானங்கள் சீர்செய்யப்படும்.

          மேலும் தற்பொழுது பணிகள் துவக்கப்பட்டுள்ள வடசித்தூர் கிராம நீரினை பயன்படுத்தவோர் சங்கத்திற்குட்பட்ட பகீர்மான கால்வாய்கள் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும்பணி துவக்கப்பட்டதுடன் இதன்மூலம் இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 2963 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் இதுமட்டுமின்றி இதன்மூலம் கடைமடை வரை நீர் சேதாரமின்றி சமச்சீராக நீர் விநியோகம் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

           சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சிவ.ஜெயராமன்  பேசுகையில்.

           அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றும் விதமாக அம்மாவின் அரசு சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகுந்த வறட்சியை சரிசெய்யும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் கிடைத்திடும் வகையில் போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாதிப்பை சரிசெய்யும் விதமாக வறட்சி நிவாரணம் நிதியும் போர்கால அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை சேமிக்கும் விதமாக பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு கீழ் புத்துயிர் அளிக்க விதமாக ஏரிகள், கால்வாய்கள், வாய்க்கால், மதகுகள் மற்றும் நீர்நிலைங்கள் ஆகியவை சீர்செய்ய இத்திட்டம் துவக்கப்பட்டு பணிகள் தற்பொழுது செயல்படுத்த துவங்கியுள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு தேவையான நீராதாரங்கள் பெற்று பயன்பெற மிகப்பயனுள்ளதாக இருக்கும். இதேபோல்  அம்மா அவர்களின் அரசு எண்ணற்ற திட்டங்களை ஏழை எளியோர் பொருளாதார முன்னேற்றம் பெற செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென  சட்டப்பேரவை துணைத்தலைவர்  பொள்ளாச்சி வ.ஜெயராமன்  தெரிவித்தார்.

                இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், ஆர்.கணகராஜ், அம்மன் கே.அர்ச்சுணன், கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்தின், பொள்ளாச்சி சார் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்  பரம்பிக்குளம் ஆழியார் வடிநிலக் கோட்டம் கண்கானிப்பு பொறியாளர் பி.தியாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், செயற்பொறியாளர் முத்துச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்