முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

     தேனி.- தேனி மாவட்டம், தேனி வட்டத்திற்குட்பட்ட குப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் இன்று (15.03.2017) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் மாதாந்திர உதவித்தொகைகள், விலையில்லா வீட்டுமனைப்பட்டா, இயற்கை மரணம் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உட்பட 59 பயனாளிகளுக்கு ரூ.3,36,000- மதிப்பிலும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.7,382- மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு ரூ.19,600- மதிப்பிலான மாங்கன்றுகளையும், புதுவாழ்வு திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு ரூ.9,450- வீதம் தலா 35 நபர்களுக்கு ரூ.3,30,750- மதிப்பிலான மானியத்தொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிக்கு ரூ.8,000- மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டி உபகரணங்களையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.7,200 மதிப்பிலான காதொலி கருவியினையும், என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ.7,08,932- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், மேலும், வருவாய்த்துறையின் சார்பில் 1 பயானிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 32 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்வழங்கினார்.
      மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு பயன்களை வழங்கி தெரிவிக்கையில், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் பயன்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மக்கள் இருக்குமிடங்களுக்கே தேடிச் சென்று நடத்தப்படும் முகாமே இந்த மக்கள் தொடர்பு முகாம். தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காக எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களையும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது.
     மேலும், ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடையுடன் தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. சுகாதாரமான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ஒரு கிராமத்திற்கு தேவையான தனிநபர் கழிப்பிட வசதி, பொது ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிப்பிட வசதிகள் செய்து வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்களின் குடியிருப்புகளில் கழிப்பறைக்கு தேவையான இட வசதி இருந்தால் தனிநபர் கழிப்பறை உருவாக்கிடவும், குடியிருப்புகளில் இட வசதி இல்லாதவர்களுக்கு பொது கழிப்பறை வசதியினை ஏற்படுத்திடவும் ரூ.12,000- அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
      தமிழக அரசு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், நிலையான வருவாயினை ஏற்படுத்திடவும் புதிய தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளே தனியாக பயிற்சி அளித்து  வங்கிக்கடனாக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்தில் கடனுதவியும் அளித்து வருகிறது. புதிய தொழில் புரிய விருப்பமுள்ளவர்கள் சந்தையில் பொருளுக்கான தேவை என்ன, பொருளின் முக்கியத்துவம் அறிந்து அதன் விற்பனை இடங்கள், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து குறைந்த செலவில் எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை கணக்கிட்டு தொழில் தொடங்கிட வேண்டும். எனவே, பொதுமக்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்தெரிவித்தார்.
 இம்முகாமில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மூர்த்தி கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.வரதராஜன் துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.சண்முகசுந்தரம் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) கார்த்திகேயன் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் திருமதி.கிருஷ்ணவேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.ராஜராஜேஸ்வரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன் உதவி இயக்குநர் (கனிமம்) சாம்பசிவம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதி ராமலிங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன் வட்டாட்சியர் ஷேக்அயூப்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்