முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் பதவி ஏற்பு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

இம்பால்  - மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அங்கு நடைப்பெற்று வந்த 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

பா.ஜ.கவுக்கு 21 இடங்கள்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 28 இடங்களை கைப்பற்றியது. பாரதீய ஜனதாவுக்கு 21 இடங்கள் கிடைத்தன.

கவர்னரிடம் கோரிக்கை
இதனால் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கேள்விக்குறி எழுந்தது. இதனையடுத்து இதர கட்சிகள் ஆதரவை பெற்று பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, பாரதீய ஜனதா தலைவர்களும் அந்த கட்சியை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்களும் நேற்று முன்தினம் மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்தித்து 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை வழங்கி, புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதாவுக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். கவர்னரை சந்திக்க சென்ற தலைவர்களுடன் நாகா மக்கள் முன்னணியின் 4 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற 28 எம்.எல்.ஏ.க்களும் சென்று இருந்தனர். நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் ஆதரவு கடிதம் கொடுத்து இருந்தனர்.

முதல்வராக பதவியேற்பு
அதை தொடர்ந்து, ஆட்சி அமைக்கும்படி, பா.ஜ.கவுக்கு, ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார்.  மேலும், அவர் சட்டசபையை 22 அல்லது 23-ம் தேதி கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் மணிப்பூர் மாநில முதல்வராக நேற்று பிரேன் சிங் பதவி ஏற்றுக்கொண்டார். பிரேன் சிங்கிற்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  அதனை தொடர்ந்து துணை முதல்வராக தேசிய மக்கள் கட்சியின் ஜாய்குமார் சிங் பதவியேற்று கொண்டார். 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் ஒருவர் மட்டுமே பா.ஜ.க, வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் முதன் முதலாக பாரதீய ஜனதா ஆட்சி அமைய இருக்கிறது. இதன்மூலம் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி அங்கு முடிவுக்கு வந்துள்ளது.

பத்திரிகையாளார்
முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பைரன் சிங் தேசிய கால்பந்து வீரராக, பத்திரிகையாளராக திகழ்ந்தவர். பின்னர் 2002-ம் ஆண்டு ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் சேர்ந்தார். எம்.எல்.ஏ. ஆகி அமைச்சர் பதவியும் வகித்தார். 2004-ம் ஆண்டு அந்த கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அரசியல் பிரவேசம் செய்த 15 ஆண்டில் அவர் முதல்வர் பதவியை எட்டிப்பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்