போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை பணிக்கான போட்டி தேர்வுக்கு நாளைமறுநாள் 18ந் தேதி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சிறப்பு காவல்படை 2ம் நிலை காவலர் பணியிடம் 4569, ஆயுத படை பிரிவு 2ம் நிலை காவலர் பணியிடம் 4627 , 2ம் நிலை சிறை காவலர் பணியிடம் 976 , தீயணைப்பு வீரர் 1512 , உள்பட மொத்தம் 15,711 பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் போட்டி தேர்வு மூலம் நிரப்பவுள்ளது. அதையட்டி போட்டி தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 23ந் தேதி முதல் வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 23ந் தேதி விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. வருகிற மே 21ந் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 18ந் தேதி முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின்மூலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுக்கு நாளை மறுநாள் 18ந் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். தகுதிவாய்ந்த முன் அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் எனவே தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைளஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவிதுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: