காடச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 231 பயனாளிகளுக்கு ரூ.46.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      நாமக்கல்
3

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், காடச்சநல்லூர் மற்றும் எலந்தகுட்டை ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அவர்கள் தலைமையிலான மனுநீதி நாள் முகாம் காடச்சநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காடச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று (15.03.2017) நடைபெற்றது. இம்மனுநீதி நாள் முகாமிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,

 

அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து பயன்பெறுவதற்கு ஏதுவாக மாதந்தோறும் கலெக்டர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தலைமையில் கிராமப்புறங்களில் மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்மனுநீதி நாள் முகாமினை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது தீர்வு காணப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்படுகின்றன. மக்களைத்தேடி அரசாங்கம் என்பதுதான் மனுநீதி நாள் முகாமின் முக்கிய நோக்கமாகும். இம்மனுநீதி முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளில் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற திட்டங்கள் குறித்தும் இங்கே தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது பல்வேறு துறைகள் சார்பில் விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பொதுமக்கள் பார்த்துப் பயன்பெறுவதோடு, அரசின் திட்டங்களில் தங்களுக்கு தகுதியான திட்டங்களை அறிந்து அத்தகைய திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். . குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பல்வேறு நோய் தாக்கங்களிலிருந்து பாதுகாத்திட அரசு சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குதல், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 5 இலட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டு இதுவரை சுமார் 3.50 இலட்சம் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மீதமுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் இதனையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்துடன் கூடிய வளர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என்றார். இம்மனுநீதி நாள் முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 149 நபர்களுக்கு ரூ.29.80 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.16,19,190 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், வழங்கல் துறையின் சார்பில் 34 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், வேளாண்மை துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.35,833- மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், தோட்டக்கலையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.40,000- மதிப்பிலான உயர்தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் விதைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 22 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வல்வில்சுதேசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தமைக்காக 5 நபர்களுக்கு பங்குத்தொகை சான்றுகளையும் என மொத்தம் 236 பயனாளிகளுக்கு ரூ.46,75,023 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார். இம்மனுநீதி நாள் முகாமில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ந.பாலச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இணை இயக்குநர் (வேளாண்மை) ஆர்.கலியராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, உதவி ஆணையர் கலால் புகழேந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இராஜேஸ்வரி, உட்பட பல்வேறு துறை அலுவலர்கள், பள்ளிபாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் தனசேகர், காடச்சநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முனியப்பன் உட்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் திட்ட விளக்கவுரையாற்றினர். குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ஆர்.இரகுநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: