முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் இல்லை : மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் பெறவில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசு அறிவிப்பு
கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணம் மீதான நடவடிக்கையாக மத்திய அரச் ரூ500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டது. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது. அதன் பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது.

விதி விலக்கு
இதற்கிடையே பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த மத்திய அரசு விலக்கு அளித்தது. அதன்படி குறிப்பிட்ட காலங்கள் மட்டும் மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், விமான நிலையங்கள், உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன.

மக்கள் கடும் அவதி
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் என்று நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று முதியவர்கள் உயிரிழந்த சம்பவமும் நேரிட்டது. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் போது நாடு முழுவதும் இவ்வாறு 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியிடப்பட்டது. இப்பிரச்சனையானது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகளால் பெரிதும் எழுப்பட்டது.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
இந்நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்றிய போதும், எடுத்த போதும் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை எத்தனை என கேள்வி எழுப்பட்டது. இதற்கு மத்திய நிதிதுறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்து உள்ள பதிலில் “இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை,” என கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்