முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களின் சேவை சமுதாய வளர்ச்சிக்கு பெரும் உதவியாக உள்ளது ஐகோர்ட் நீதிபதி முரளிதரன் பேச்சு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை, -        பெண்களின் சேவை நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கு பெரும் உதவியாக உள்ளது என்று உலக மகளிர் தினவிழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.வி.முரளிதரன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
           மதுரை பெட்கிராட் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூட்டமைப்பு தொண்டு நிறுவனத்தின் 24 வது ஆண்டு உலக மகளிர் தினவிழா மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகர் பஸ்ஸ்டாப் அருகே உள்ள ஜெயசக்தி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு பெட்கிராட் நிறுவனர் எம்.சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் என்.சுருளிஜி, பொதுச்செயலாளர் எஸ்.அங்குச்சாமி, துணைத்தலைவர் ஏ.எல்.சிதம்பரம், பொருளாளர் சுசிலா குணசீலி, துணைத்தலைவர் எஸ்.கிருஷ்ண வேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.சாரால்ரூபி அனைவரையும் வரவேற்று பேசினார். பகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாக்கியலெட்சுமி உறுதிமொழி வாசித்தார்.
     விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.வி.முரளிதரன் கலந்து கொண்டு 20 ஏழைப்பெண்களுக்கு தையல்மிஷன்கள், ரூ.10 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி முறையாக செலுத்திய மகளிர் குழுவினருக்கு விருதுகளையும், டி.வி.புகழ் மதுரை முத்துவிற்கு சாதனை திலகம் விருது ஆகியவற்றை வழங்கி பேசினார்.
    அப்போது அவர் பேசியதாவது:-
             பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்து வரும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் பாராட்டக்குரியவை. இன்றைக்கு பெண்கள் இல்லாத துறையே இல்லை. அந்த அளவிற்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி உள்ளனர். பெண்கள் சொந்த காலில் நிற்க கல்வி கற்பது மிக, மிக முக்கியம். படித்த பெண்கள் சுயதொழில் செய்வதன் மூலம் தன்னை காத்து கொள்வது மட்டுமல்லாது. குடும்பத்திற்கும் பேரதவியாக இருக்கிறார்கள்.
           இது போன்று சாதனை படைத்து வரும் பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவேண்டும். அதற்கு பெண்களுக்கு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அவசியம். பெண்களின் சேவை இந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இன்றைக்கு பெண்கள் விமானம் ஓட்டுவது முதல் விண்வெளி ஆராய்ச்சியில் பங்கேற்று சாதித்துவருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படிப்பட்ட பெண்களை போல நீங்களும் படித்து தேர்ந்து பலசாதனைகளை புரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
          இந்த விழாவில் மதுரை மாவட்ட  கலெக்டர் வீரராகவராவ், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி, நீதிபதி முரளிதரன் மனைவி எம்.விஜயகுமாரி, அரசு மருத்துவமனை டீன் வைரமுத்துராஜூ, மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலர் ஆனந்தவள்ளி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் முத்தையா, முதுநிலை மேலாளர் உதயகுமார், வக்கீல் மோகன் தாஸ், நாடக நடிகை ஜெயந்தி, இந்தியன் வங்கி கிளை மேலாளர் ராஜலெட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் குழு பகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.புஷ்பகலை நன்றி தெரிவித்தார்.
      முன்னதாக மதுரை காளவாசல் பிக்பஜார் அருகில் இருந்து பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மகளிர் பேரணியை மதுரை மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி பைபாஸ் ரோடு வழியாக சொக்கலிங்கநகரில் உள்ள ஜெயசக்தி மஹாலை அடைந்து நிறைவு பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்