முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சி டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 451 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி  - ராஞ்சியில் நடைப்பெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கேப்டன் ஸ்மித் சதம்
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய கேப்டன்  ஸ்மித் சதம் அடித்தார்.  ஸ்மித் அடித்த  19-வது சதம் இதுவாகும்.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்து  இருந்தது. ஸ்டீவன் சுமித் 117 ரன்களுடனும் (244 பந்து, 13 பவுண்டரி), மேக்ஸ்வெல் 82 ரன்களுடனும் (147 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

ஸ்மித் 178 ரன்கள்
2-வது நாள் ஆட்டம் நேற்று துவங்கியதும் சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மேக்ஸ்வெல் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 104 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இவருக்கு பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறிய போதிலும் ஒரு முனையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 137.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 178 ரன்கள் சேர்த்த ஸ்மித் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்களையும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்களையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ரகானேவுக்கு பயிற்சியாளர் பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் சீனியர் வீரர்கள் ஆலோசனைகளை கேட்டு, ரகானே பீல்டிங் அமைக்கும் பொறுப்பை சிறப்பாக செய்தார் என பயிற்சியாளர் பாராட்டினார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் அவர் 40-வது ஓவரில் களத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து கேப்டன் பொறுப்பை ரகானே கவனித்தார். இதுகுறித்து இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-ரகானே பீல்டிங் அமைக்கும் பொறுப்பை சிறப்பாக செய்தார். அவர் சீனியர் வீரர்கள் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டார். பந்து வீச்சாளர்களிடம் நல்ல புரிந்துணர்வுடன் செயல்பட்டார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்