முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மைத் துறையின் சார்பில் தென்னை மரங்களுக்கு சிக்கனமான முறையில் குடிநீர் பயன்படுத்தும் முறையினை திருப்பூர் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      திருப்பூர்

              திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம், சோளிபாளையத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில்  தென்னை மரங்களுக்கு சிக்கனமான முறையில் குடிநீர் பயன்படுத்தும்  முறையினை  விவசாயிகளின் முன்னிலையில்  மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது

           நமது மாவட்டத்தில் தற்போது  வறட்சியான சூழல் உள்ளது. வறட்சியினை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தென்னை மரங்களுக்கு நீர் எளிதில் ஆவியாதலை  தடுக்கும் வகையில் தென்னை மரங்களைச் சுற்றி  நான்கு புறங்களில் துளையிட்டு மணலும் இயற்கை உரம், மக்கிய தென்னை நார் கழிவு  சரிபாதி அளவில் கலந்து கொண்டு,  மேற்படி குழியில் ஒரு மூலையில் 4” பைப் வைக்க வேண்டும். மேற்படி குழியில் நான்கில் ஒரு பங்கை கலந்து வைத்துள்ள மணலும் இயற்கை உரமும் கொண்டு நிரப்ப வேண்டும்.  பின்னர் தென்னை மரங்களைச் சுற்றி தோண்டப்பட்ட குழியில்  மணலைக் கொண்டு குழியினை மூட வேண்டும். பின்னர் 4” பைப்பில் மீதமுள்ள மணல் மற்றும் இயற்கை உரம் கொண்டு நிரப்பி பைப்பை வெளியே எடுக்க வேண்டும். பைப் வைக்கப்பட்ட இடத்தில் தினசரி தண்ணீர் ஊற்றும் போது மரத்தின்  வேரில் ஈரப்பதம் இருப்பதால் வறட்சி காலங்களில் தென்னை மரங்களுளக்கு தேவையான நீரினை பெற முடிகிறது. இத்தகைய நவீன தொழில்நுட்பம் நான்கு 2” இன்ச் பைப் மூலமாகவும் செயல்படுத்தலாம்.

          

            மேலும், கால்நடைகளுக்கு குறுகிய காலத்தில் தீவனம் உற்பத்தி செய்து வழங்குவதற்காக வேளாண்மைத்துறை மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை ஆகிய துறைகள் இணைந்து கால்நடைகளின் தீவனத்திற்காக மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் தாவரங்களை வளர்க்கும்  ஹைட்ரோபோனிக் என்ற புதிய முறையில்  மக்காச்சோளம் தீவனம் உற்பத்தி செய்தல் மற்றும் அசோலா தீவனம் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த முறையில் 10 நாட்களில் ஒரு கிலோ மக்காச்சோள விதையிலிருந்து 10 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம். இத்தகைய நவீன உற்பத்தி முறையை விவசாயிகள் கையாண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

     இதனைத் தொடர்ந்து, புதிய தொழில்நுட்ப முறையின் மூலம் தண்ணீரை சேமிக்கும் வகையில் புதிய மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர்  நட்டு வைத்து  விவசாயிகளுக்கு வறட்சி மேலாண்மை குறித்தும் தீவன உற்பத்தி குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்கள்.

           இந்நிகழ்வின் போது  வேளாண்மைத் துறை இணை இயக்குநர் எஸ். ரெங்கநாதன், துணை இயக்குநர் தமிழ்செல்வன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)பழனிக்குமார், விவசாயிகள்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்