Idhayam Matrimony

பிரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

இம்பால், மணிப்பூர் மாநில சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக புதிய அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

மெஜாரிட்டி இல்லை

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. நாகலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதியிலும், தேசிய மக்கள் கட்சி 4 தொகுதியிலும், லோக்ஜன சக்தி திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

பா.ஜ.க.வுக்கு ஆதரவு

காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகள் ஆதரவை பெற முடியவில்லை. அந்த கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன. இதன் மூலம் பா.ஜனதாவின் பலம் 33 ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து தலைநகர் இம்பாலில் நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக (முதல்வராக ) தேர்வு பிரேன் சிங் செய்யப்பட்டார். கவர்னர் நஜ்மா ஹெப் துல்லாவை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார்.

முதல்வராக பதவியேற்பு

இதை கவர்னர் ஏற்றுக்கொண்டு பிரேன் சிங்கை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகையில் கடந்த 15-ம் தேதி மணிப்பூர் முதல்வராக பிரன்சிங் பதவி ஏற்றார்.  தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாய் குமார் துணை முதல்வராக பதவி ஏற்று கொண்டார். அவரை தொடர்ந்து இதர இலாகாக்களுக்கான அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவர்கள் அனைவருக்கும் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

இந்நிலையில், கவர்னரின் முந்தைய அறிவுறுத்தலின்படி தனது தலைமையிலான அமைச்சரவைக்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நிரூபிக்க நாளை சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த முதல்வர் பிரன் சிங் தீர்மானித்துள்ளார். முன்னதாக புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படவுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் எஸ்.பிரா முன்னிலையில் பதவி ஏற்கின்றனர். நாளை நடைபெறவுள்ள பலப்பரீட்சையில் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றால் 28 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சியாக பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்