முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி 6 விக்கெட்டு இழப்புக்கு 360 ரன்கள்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ராஞ்சியில் நடைபெற்றுவரும் 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் முடிவில், புஜாரவின் அபார சதத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் எடுத்துள்ளது. இது ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் குறைவு.

முதல் இன்னிங்ஸ்

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா  அணி தனது முதல் இன்னிங்சில் 451 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித் 178 ரன்களுடன் (361 பந்து, 17 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். மேக்ஸ்வெல் 104 ரன்கள் எடுத்தார்.  இந்திய தரப்பில்  சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை துவங்கியது நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில்,  40 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. விஜய் 42 ரன்களுடனும் (112 பந்து, 6 பவுண்டரி), புஜாரா 10 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

விஜய் 82 ரன்கள்

நேற்று 3-வது நாள் ஆட்டம் துவங்கியதும் இந்தியா நிதான ஆட்டத்தை கடைபிடித்தது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த முரளி விஜய் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். 129 பந்துகளில் முரளி விஜய் அரை சதம் எட்டினார். இது அவரது 50வது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் வெகு நிதானமாக ஆடி வந்த புஜாரா ஒரு கட்டத்தில் 100 பந்துகளை சந்தித்து 23 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

கோலி அவுட்

உணவு இடைவேளைக்கு சில மணித்துளிகளுக்கு முன்னால், முரளி விஜய் ஓ கீஃப் பந்தில் 82 ரன்களுக்கு ஸ்டம்பிங்க் ஆகி பெவிலியன் திரும்பினார். உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்க, கேப்டன் கோலி புஜாராவுடன் களத்தில் இணைந்தார். 155 பந்துகளில் புஜாரா அரை சதம் கடந்தார்.  மறுமுனையில் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இந்த இன்னிங்ஸிலும் ஏமாற்றமளித்தார். தொடர்ந்து வந்த ரஹானே 14 ரன்களுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த புஜாரா 214 பந்துகளில் பவுண்டரியுடன் தனது சதத்தை எட்டினார். அரை சதத்திலிருந்து, சதத்துக்கு 60 பந்துகளுக்கும் குறைவாகவே அவர் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

புஜாரா சதம்

தேநீர் இடைவேளை முடிந்து 303 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணியில் புஜாரா மட்டுமே நம்பிக்கை அளித்தார். கருண் நாயர் 23 ரன்களுக்கும், அடுத்து ஆட வந்த அஸ்வின் 3 ரன்களுக்கும் வீழ்ந்தனர். அடுத்து சாஹா களமிறங்கினார். புஜாராவின் உறுதியான ஆட்டத்தின் முன்னால் ஆஸி.யின் எந்த பந்துவீச்சு மாற்றமும் எடுபடாமல் போனது. சாஹாவும் அவ்வபோது பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். ஆஸ்திரேலியாவால் மேற்கொண்டு விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் போக, இந்திய அணி 3-வது ஆட்ட நேர முடிவில் 360 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.  புஜாரா 130 ரன்களுடனும், சாஹா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி 91 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்