ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      இந்தியா
central government(N)

புதுடெல்லி, ஜி.எஸ்.டி. தொடர்பாக 4 துணை மசோதாக்களுக்கு மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பை கொண்டுவரும்  வகையில் ஜிஎஸ்டி மசோதா பாராளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் சில திருத்தங்களை கோரியதால் சில திருத்தங்களுடன் 4 துணைமசோதாக்களை பாராளுன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாக்கள் பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டசபையில் நிறைவேறியவுடன் ஜிஎஸ்டி தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்துவிடும் வரும் ஜுலை மாதம் 1-ம் தேதியில் இருந்து இது அமுலுக்கு வந்துவிடும்.

ஜிஎஸ்டியின் மூலம் மத்திய அரசின் சுங்கவரி மற்றும் சேவை வரி, மாநிலங்களின் வாட் வரி விதிப்பு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும். இதன்மூலம் ஒரு நாடு ஒரே வரி விதிப்பு முறை அமுலுக்கு வந்துவிடும். ஜிஎஸ்டி கவுன்சிலானது ஏற்கனவே 4 அடுக்கு வரிவிதிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது 5, 12,18,28 சதவீத விதிப்பு முறையை அறிவித்துள்ளது. இதைத்தவிர சொகுசு கார், குளிர்பானங்கள், புகையிலை பொருட்கள் ஆகியவைகளுக்கு கூடுதலாக வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.


நேற்று நடைபெற்ற மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதா 2017,ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா 2017, யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி மசோதா 2017, மாநிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா 2017 ஆகிய 4 துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கேபினட் கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வாரத்திலேயே இந்த 4 மசோதாக்களும் பண மசோதா என்ற பெயரில்  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக விவாதமும் நடைபெறும். கேபினட் கூட்டத்தில் இந்த 4 மசோதாக்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை முடிந்த அளவு விரைவில் அமுல்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இது வரிவிதிப்பு முறையில் பெரிய சீர்திருத்தம் என்று கருதப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்: