நம்பிக்கை வாக்கெடுப்பில் மணிப்பூர் பா.ஜ.க. அரசு வெற்றி : பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் பிரேன் சிங்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      இந்தியா
biren singh take oath 15 03 2017

இம்பால்  - நம்பிக்கை வாக்கெடுப்பில் மணிப்பூர்  பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது.  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் பிரேன் சிங். முன்னதாக, மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகரான பாஜகவின் யும்நம் கேம்சந்த் குரல் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர், அவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரகசிய வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், சபாநாயகர் அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

குரல் வாக்கெடுப்பு
தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், 31 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தற்போது மணிப்பூர் சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 27 ஆக உள்ளது.
முன்னதாக, மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28, பாஜக 21 இடங்களைக் கைப்பற்றின. நாகாலாந்து மக்கள் முன்னணி 4, தேசிய மக்கள் கட்சி 4, லோக் ஜன சக்தி 1, திரிணமூல் காங்கிரஸ் 1, சுயேச்சை 1 தொகுதியில் வெற்றி பெற்றன.

அதிருப்தி எம்.எல்.ஏ.கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு
மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் கடந்த 15-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மேலும் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் நாகாலாந்து மக்கள் முன்னணியின் 4 எம்.எல்.ஏ.க்கள், தேசிய மக்கள் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. ஷியாம்குமார் சிங் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரபீந்த்ரோ சிங் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: