முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியல் எஸ்டேட் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தமிழகத்தில் பத்திரபதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி ராமநாதபுரத்தில் ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கத்தினர்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழகத்தில் அங்கீகாரம் செய்யப்படாத மனைகளையோ, அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளையோ பத்திரபதிவு செய்யக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக பத்திரபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்வி,  மருத்துவம், திருமணம், கடன்கள் முதலியவற்றிற்கு தங்களின் சொத்துக்களை விற்பனை செய்து பணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவு 80 சதவீதம் குறைந்து தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் கோடி  அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான மறுவிசாரணை ரிட் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பத்திரபதிவு தொடர்பான வழக்கை முடிவு செய்வதற்காக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசின் சார்பில் கோர்ட்டில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. 

       இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக பத்திரபதிவு தொடர்பாக தேவையான விரிவான அறிக்கையையும் புதிய வரன்முறைகளையும் வகுத்து கோர்ட்டில் அளிக்க வேண்டும். பத்திரபதிவு மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாண்டியன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அசன்அலியார் முன்னிலை வகித்தார். செய்தி தொடர்பாளர் செந்தில் வரவேற்று பேசினார். இதில் மாநில தலைவர் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் அன்புச்செல்வன், மாவட்ட இணை செயலாளர் அபுதாகிர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, காங்கிரஸ் நிர்வாகி டி.கே.குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, அ.தி.மு.க. நிர்வாகி உச்சிப்புளி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

     ஆர்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாண்டியன் பேசியதாவது:- தமிழகத்தில் ரியல்எஸ்டேட்தொழில் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு நிலம் விற்பனையின் மூலம் அதனை விற்பவர் அந்த தொகையை பல்வேறு செலவுகளுக்கு பயன்படுத்துவார். அதன்மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கிறது. 5 சென்டு நிலத்தினை வாங்குபவர் அதில் 2 ஆயிரத்து 180 சதுர அடியில் ஒரு வீடுகட்டும்பொழுது பல பொறியாளர்கள், அதனை கட்டி முடிக்க தேவைப்படும் 536 வேலை நாட்களுக்கான கொத்தனார்கள், ஆயிரத்து 508 வேலை நாட்களுக்கான சித்தாள்கள், மற்றும் இதர தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என 4 ஆயிரத்து 360 நபர்கள் பயனடைகிறார்கள். இவ்வாறு தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பயனடையும் ரியல் எஸ்டேட் தொழில் தற்போது முடங்கிபோய் உள்ளது. அதேபோல 8 சதவீத முத்திரை தாள் மூலம் ஒரு ஏக்கர் நிலம் பத்திரபதிவு செய்தால் அரசுக்கு ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதுபோல, தமிழகம் முழுவதும் ஒருநாளுக்கு 360 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன்மூலம் ரூ.14 கோடியே 76 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது.

     கடந்த 2015-16ல் பத்திரபதிவு மூலம் அரசுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.  ஆனால், இந்த ஆண்டு இதுவரை அரசுக்கு ரூ.324 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஏற்பட்டுள்ள தெளிவாக தெரிகிறது.  எனவே, பத்திரபதிவிற்கான தடையை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்