முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொம்பனைப்புதூரில் காளிங்கராயன் பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் லாண்மை திட்ட கருத்தரங்கு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, கொம்பனைப்புதூர் ஸ்ரீஅம்மன் கலையரங்கத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நடைபெற்ற காளிங்கராயன் பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் மேலாண்மை திட்ட கருத்தரங்கினை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ்  தலைமையில்,  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தொடங்கி வைத்து 7 பயனாளிகளுக்கு ரூ.16.20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நடவடிக்கை

        பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசியதாவது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா  விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள்.  அம்மா  நல்லாசியுடன்  நடைபெறும் தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் அத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் அத்திட்டங்களை சிறப்பான முறையில் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்த வறட்சி நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எந்தவிதமான இடர்பாடுகள் வந்தாலும் கோரிக்கைகள் இருந்தாலும் அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் விளைவித்து கொண்டிருந்த இந்த பகுதியில் இன்று தென்னை மரங்களுக்கான நீர் பற்றாக்குறை இருப்பதை காண முடிகிறது. இப்படியொரு வறட்சி கடந்த 150 ஆண்டுகளில் கண்டதில்லை. விவசாயிகளின் இந்த நிலையைக் கண்டு உடனடியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கான தேவைகளை நிறைவேற்றும் அரசாக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை வழங்கி வருகிறது.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான அத்திகடவு-அவினாசி திட்டத்திற்கு ரூ.205 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அப்பகுதி மக்களின் நீர் ஆதாரத்திற்கும் வழிவகை செய்துள்ளது. இந்தப்பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மட்டுமல்லாமல்  ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் நலன் கருதி இயற்கையை நம்பி வாழும் பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசு சீமைக்கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் அகற்றி வருகிறது. சீமைக்கருவேல மரங்கள் வளர்வதால் அவை காற்றில் உள்ள ஈரப்பசைகளை உள்வாங்கி நீர் ஆதாராத்தை அழிக்கும். எனவே இயற்கை வல்லுநர்களின் அறிவுரைகளின்படி சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்த நாளன்று மரம் நடும் விழா சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24 அன்று தமிழ்நாடு முழுவதும் 69 இலட்சம் மரங்கள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்திய திருநாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. தமிழகம் முழுவதும் ரூ.2,472 கோடி வறட்சி நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. விவசாய பெருமக்கள் வாழ்வில் எல்லோரும் எல்லாமும்  பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  வேளாண் கருவிகள் வாடகை மையம் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு டிராக்டர், மினி டிராக்டர், கதிரடிக்கும் இயந்திரம், சுழற் கழப்பை, கொத்து கழப்பை வேளாண் கருவிகள் மொத்த மதிப்பீடான ரூ.26.17 இலட்சத்தில் அரசு மானியத்தொகை ரூ.10 இலட்சம், ஒரு நபருக்கு வேளாண் உபகரணம் மொத்த மதிப்பீடான ரூ.6.30 இலட்சத்தில் அரசு மானியத்தொகை ரூ.3 இலட்சம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு டிராக்டர் பெற தலா ரூ.1 இலட்சம், அம்மா திட்டம் சுழல் நிதியின் கீழ் 2 மகளிர் குழுக்களுக்கு தலா ரூ.10,000/- என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.16.20 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), தலைமை  பொறியாளர் இரா.மணி, செயற்பொறியாளர் வே.வெற்றிவேலன், இணை இயக்குநர் (வேளாண்மை) இரா.விஸ்வநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சு.முருகன்,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்